தீபாவளி கொண்டாட்டங்கள் ஒரளவு முடிவுக்கு வந்துவிட்டன என்று சொல்லலாம்.
இந்த நேரத்தில் ஒரு சில விஷயங்கள் நம் மனதை நோகடிக்கின்றன. பத்திரிக்கையில் வந்த செய்தி தான் என்றாலும் அது பொய்யாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஏதோ ஓரிரு செய்திகள் அப்படி இருக்கலாம் அதற்காக அனைத்தும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது.
தீபாவளி காலங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓர் எதிர்ப்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அது இயல்பானது தான். அதுவும் கோவிட் 19 காலத்தில் நிறைய ஏமாற்றங்கள், பொருளாதார நட்டங்கள் - இப்படி கடந்து இரண்டு மூன்று ஆண்டுகளாக வியாபாரிகள் சந்தித்து வந்திருக்கின்றனர். இந்த ஆண்டு அவர்களுக்கு இலட்சிமிகரமாக அமையும் என்கிற எதிர்ப்பார்ப்பு அவர்களுக்கு உண்டு.
ஆனாலும் வேறு ஒரு வடிவத்தில் வியாபாரிகளுக்குத் தடங்கள் வரும் போது வழக்கம் போல அவர்கள் விரக்தி அடைந்து விடுகின்றனர். எல்லா காலங்களிலும் அவர்களுக்கு இடையூறு வருகிறது என்றால் அது அரசாங்கத்தினரிடமிருந்து தான். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான். இந்தியர்களுக்கு மட்டும் தான் இப்படி ஒரு நிலை!
கிள்ளான், லிட்டல் இந்தியாவைப்பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். யாருடைய குற்றம் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இங்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், வி.கணபதிராவ் மீது தான் குற்றம் சாட்டப்படுகிறது! இது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம் தான். நாம் இதனை எதிர்ப்பார்க்கவில்லை.
ஒரு கலை நிகழ்ச்சிக்காக மூன்று நாட்களுக்குச் சாலைகளை அடைத்து, வியாபாரத்தைக் கெடுத்து, மக்களின் கோபத்திற்கு ஆளாகி - இதற்குக் காரணகர்த்தாவான கணபதிராவின் நோக்கம் தான் என்ன? நம்முடைய கேள்வி எல்லாம் நமது வியாபாரிகளின் நலன் முக்கியம் இல்லையா? கலை நிகழ்ச்சியை நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்காகச் சாலைகளை இழுத்து மூடிவிட்டுத் தான் கலைநிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது அவசியம் இல்லையே? சாலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அல்லவா நிகழ்ச்சியை நடத்திருக்க வேண்டும்? அதுவும் மூன்று நாள்களுக்கு அடைப்பு என்றால் நிச்சயமாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கலை நிகழ்ச்சியை வேறு ஒரு நாளுக்கு மாற்றலாமே. அதிலே என்ன பிரச்சனை? பார்க்க வேண்டுமென்று நினைப்பவர்கள் நிச்சயமாக வரத்தான் செய்வார்கள். அவர்களை யார் தடுத்தார்? தொழில் செய்பவர்களுக்கு ஏன் தொடர்ந்தாற் போல் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டும்?
இதனை, என்ன காரணங்கள் சொன்னாலும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. கலை நிகழ்ச்சியை நடத்துங்கள். ஆனால் வியாபாரிகளுக்கு இடைஞ்சலாக இருக்காதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment