Saturday 8 October 2022

தாஜ்மகாலை மிஞ்சுகிறதா மாமல்லபுரம்?

 

                                                மாமல்லபுரம் , தமிழ் நாடு  

உலக அதிசயங்களில் ஒன்று  இந்தியா,  ஆக்ராவில் உள்ள  காதலின் சின்னமான தாஜ்மகால் என்பது பலருக்குத் தெரியும். இந்திய அளவிலும் சரி உலகளவிலும் சரி சுற்றுப்பயணிகளை மிகவும் கவர்ந்த இடம் என்றால் அது தாஜ்மகால் மட்டுமே.

ஆனால் இப்போது அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை  அறிய முடிகிறது. இந்தியாவின் சுற்றுலாத்துறை  இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றது.

கொரோனா தொற்று  உலகளவில் சுற்றுலாத்துறையை மிகவும் பாதித்த ஒரு நோய்.  அந்த நோய் பல நாடுகளை முடக்கிவிட்டது.  இலஙகை அதற்குச் சரியான உதாரணம். முற்றிலும் சுற்றுலாத்துறையை நம்பி வாழ்ந்த ஒரு நாடு இலங்கை. அது இந்தியாவையும் பாதித்தது.  ஓரளவு நோயின் தாக்கம் குறைந்த பிறகு இப்போது இந்தியாவின் சுற்றுலாத்துறை  மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.

சென்ற ஒராண்டு காலமாக,  2021/2022,  இந்திய சுற்றுலாத்தலங்களுக்கு  வருகின்ற  வெளிநாட்டவரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது என்பதாக சுற்றுலாத்துறை கூறுகிறது. அது நல்ல செய்தி.

இங்கே முக்கியமாகக்  கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றால் இந்தியாவில் வெளிநாட்டவரால் அதிகம் கவரப்பட்ட  சுற்றுலாத்தலம்,  தன் காதல் மனைவிக்காக  ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் தான். கட்டடம் முழுவதும் பளிங்குக்கற்கலால் ஆனவை. அதற்கு ஈடு இணை இல்லை என்பதுதான் பொதுவான கருத்து.  உலக ஏழு அதிசயங்களில் தாஜ்மகாலும் ஒன்று . சென்ற ஆண்டு தாஜ்மகாலின் வருகையாளர்கள் என்று பார்த்தால், சுற்றுலாத்துறையின் அறிவிப்பின்படி  38,922 பேர் வருகைத் தந்திருக்கின்றனர்.

ஆனால் பார்வையாளர்கள் என்று எடுத்துக் கொள்ளும் போது இந்த முறை தாஜ்மகால் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள சிற்ப கலைக்குப் பெயர் போன மாமல்லபுரம் சுற்றுப்பயணிகளுக்கு முதல் இடமாக விளங்கியிருக்கிறது.  பல்லவ சிற்பக்கலைச் சின்னங்கள், குடைவரைக்கோயில்கள்,  இரதங்கள், சிற்பங்கள் அனைத்தும் பயணிகளைக் கவர்ந்திருக்கின்றன.  மாமல்லபுரம் உலகப் பாரம்பரிய, கலை, சுற்றுலா தலமாகவும்  விளங்குகிறது. மாமல்லபுரத்தின் சென்ற ஆண்டு வருகையாளர் எண்ணிக்கை 1,44,984 பேர்.

தாஜ்மகாலின் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே  காணப்படுவதற்கு ஏதேனும்  விசேட காரணங்கள் உண்டா என்பது தெரியவில்லை. ஒரு வேளை கொரோனா தொற்று என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தென் இந்திய மாநிலங்கள் போல, வட இந்திய மாநிலங்களிலும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் சாந்தேகமில்லை.

எப்படியோ மாமல்லபுரம் தொடர்ந்து தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment