Monday 3 October 2022

தகுதி அடிப்படை என்பது சரிவருமா?

 

கல்வித்துறையில் தகுதி அடிப்படையில் தான் உயர்கல்விக் கூடங்களில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றால் நம் நாட்டைப் பொறுத்தவரை இது சரியான முறைதானா, சரிப்பட்டு வருமா என்று பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படித்தான் இந்த மெரிடோகிரசி பற்றிப் பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது.  ஆனால் எந்தப் பயனும் அளிக்கவில்லை. அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ஆண்டில், தகுதி அடிப்படியில் பார்த்த போது, மலாய் மாணவர்களே முன்னணியில் இருந்தனர்! அப்போது நம்மால் எதுவும் பேச முடியவில்லை. 

ஆக, தகுதி அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் சரி இப்போது உள்ள கோட்ட குளறுபடி முறையில் எடுத்துக் கொண்டாலும் சரி மலாய் மாணவர்கள் தான் முன்னணியில் நிற்பர். அது உறுதி.

அதைவிட இந்த கோட்டா முறையே சரியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.  இன்று நமக்கு நிபுணத்துவ துறைகளில் இடங்கள் மறுக்கப்படுகின்றன என்பது தெரியும். இதையே பல ஆண்டுகளாக நாம் சொல்லி வருகிறோம், பேசி வருகிறோம்.

ஆனால் இந்தக் குறைபாடுகளைக் களைய நமது தலைவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறது.

கல்வித்துறை என்பது மிகுந்த பரந்த கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. இன்றைய நிலையில் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் சில வாய்ப்புகளை முற்றிலுமாக இழந்து கொண்டு வருகிறோம். குறிப்பாக மருத்துவம், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் நாம் புறக்கணிக்கப்படுகிறோம். இன்னும் கூட பல முக்கியம் வாய்ந்த துறைகள் இருக்கலாம். ஆனால் அத்துறைகள் நமக்குக் கொடுக்கப் படுவதில்லை.  எனக்குத் தெரிந்த,  நான் சந்தித்த மாணவர்கள் பலர்  (Human Resources) அனைவருமே மனித வளத்துறை மட்டுமே ஒதுக்கப்பாடிருந்தது! அது முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்பது எனக்குத்  தெரியவில்லை!  மாணவர்களில் பலர் தாங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.  ஒரு சிலர் 'அதான் கிடைத்தது!' என்று மனநிறைவு அடைந்து விடுகின்றனர். இன்னும் சிலர் 'நான் கேட்டது கிடைக்கவில்லை! வேறு என்ன செய்ய? என்று கிடைத்ததை ஏற்றுக் கொள்கின்றனர். கையில் பணம் இல்லாத நிலை. எதையாவது ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை!

ஆக, ஏதாவது ஒரு துறையை இந்திய மாணவர்களுக்குக் கொடுத்தால் போதும் அவர்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்பதாக நமது கல்வித்துறையினர் நினைக்கின்றனர்!

ஆனால் இந்திய மாணவர்கள் தாங்கள் விரும்புகின்ற துறைகள் கிடைப்பதில்லை என்று அங்கலாய்க்கின்றனர்! நமக்குத் தெரிந்ததெல்லாம்  அரசியல் தீர்வின் மூலமே இதற்கு ஒரு முடிவு  காண முடியும்.

இப்போது நாம் இந்தியர்களுக்கு, அனைத்துத் துறைகளிலும்,  ஏழு விழுக்காடு கொடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.  அதையே கல்வித்துறையிலும் கொண்டு வரவேண்டும். இதனைச் சட்டம் ஆக்காமல் நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாது. இல்லாவிட்டால் நமது மாணவர்கள்  எல்லாக் காலத்திலும் புறக்கணிக்கப்படுவர் என்பது மட்டும் உறுதி.

பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஒரு பகுதியினர் உயர்ந்து கொண்டே போவதும் இன்னொரு பகுதியினர் தாழ்ந்து கொண்டே போவதும் நாட்டிற்குப் பல சீர்கேடுகளைக் கொண்டுவரும். இது புதிதல்ல. நடப்பது இந்திய மாணவர்களை ஓரங்கட்டும் வேலை. ஏற்கனவே நமது தலைவர்கள் அலட்சியமாக இருந்ததால் வந்த வினை. இது தொடர்ந்தால் இன்னும் கேடுகள் வந்து சேரும்.

எந்த அடிப்படையாக இருந்தாலும் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் அடிப்படை! கிடைக்கும்!


No comments:

Post a Comment