Monday 10 October 2022

பாரிய அளவில் போற்றப்படும் பரோட்டா!

 

ஒரு காலத்தில் தமிழர்களால் பரோட்டா என்று அழைக்கப்பட்டு - இப்போது மலேசியர்களால் விரும்பிச் சாப்பிடப்படும் உணவாக மாறியிருக்கும்  ரொட்டி சனாய் மலேசியத்  தெருவோரம் விற்கப்படும் உணவு வகைகளில் மிகச்சிறந்த உணவாக பயண வழிகாட்டி கையேடு ஒன்றின்  அறிவிப்பில் வெளிவந்திருக்கிறது.

உலக அளவில் தெருவோரங்களில் விற்கப்படும் ஐம்பது வகையான சிறப்பான உணவுகளில் ரொட்டி சானாய் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது  என்பதாக அந்த ஏடு அறிவித்திருக்கிறது.

இப்போது நாம் கொஞ்சம் பின்நோக்கி நகர்வோம். நமது நாட்டில் அதன் பின்னணி  என்ன  என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். அதன் பின்னணி என்று பார்த்தால் இந்த பரோட்டா என்பது இந்தியாவிலிருந்து இங்குக் கொண்டு வரப்பட்டதாகத்தான் தோன்றுகிறது. 1955-களில் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொல்லலாம்.  அதுவும்  அந்தக் காலகட்டத்தில் நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்களின் உணவகங்களின் தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்னொன்றையும் சொல்லலாம்.  ஆரம்பகாலங்களில் நமது இந்திய உணவகங்கள் பரோட்டாவை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை என்பது ஆச்சரியமான விடயம்.  ஆனால் பிந்நாள்களில் அவர்கள் சரண் அடைந்துவிட்டனர்! பரோட்டா இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்பதை உணர்ந்துவிட்டனர்.

அந்த காலகட்டத்தில் நானும் எனது நண்பர்களும் மாணவர்களாக  இருந்த போது தினசரி பரோட்ட சாப்பிடும் பழக்கம் உண்டு. ஒரே காரணம் தான். வீடு போய் சேரும் வரை பசி எடுக்காது என்பது தான் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம். அதன் விலை பத்து காசு அல்லது பதினைந்து காசாக இருக்க வேண்டும்.   மறந்து போனது!  ஒரு ரொட்டியும் ஒரு கிளாஸ் தண்ணியும் போதும். அதற்கு மேல் காசு இருக்காது!

இப்போது உலகளவிலும் தமிழர் உணவகங்களில் பரோட்டா ரொட்டி விற்கப்படுகின்றது என்பதையறிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! என்னன்னவோ பெயரில், என்னன்னவோ விதமாகத் தயாரிக்கின்றனர்.

ஆனால் இப்போது அதன் தரம், நமது நாட்டைப் பொறுத்தவரை,  பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ரொட்டியில் இனிப்பைக் கலக்கின்றனர். காலை நேரத்தில் கோழி இறைச்சியைப் பயன்படுத்துகின்றனர். அப்பப்பா! சொல்ல முடியவில்லை!  ஒரு சில உணவகங்கள் சாப்பிட முடியாத அளவிற்குத் தரத்தை தாழ்த்திவிட்டனர். சிக்கனம் கருதி தரத்தை கெடுத்துவிட்டனர்; ஆனால் விலையைக் கூட்டிவிட்டனர்!

ரொட்டி சனாய் உடம்புக்குக் கேடு என்று சொன்னாலும்  சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை. அது தொடர்கதை தான்! ஆனால் உணவகங்களில் சாப்பிடுவதை விட என் போன்றோர் வீட்டில் செய்து சாப்பிடுவதை விரும்புகிறோம். இது இன்னும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

பரோட்ட இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றே தோன்றுகிறது!

No comments:

Post a Comment