Tuesday 25 October 2022

அன்பளிப்புகளா? யோசியுங்கள்!


திபாவளி காலங்களில் அன்பளிப்புகள் கொடுப்பது என்பது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல. அது எல்லாகாலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பல பொது இயக்கங்கள் இதனைச் செய்து கொண்டு தான் வருகின்றன.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி என்பது கொஞ்சம் விசேடம் வாய்ந்தது. தீபாவளியின் ஊடே பொதுத் தேர்தலும் வந்து விட்டது. அது தான் இன்னும் விசேடம்.

பொதுவாக  பெருநாள் கால அன்பளிப்புகள் என்றால் பெரும்பாலும் இயக்கங்களின் முதன்மையான ஒரே 'தொண்டு'  ஒவ்வொரு ஆண்டும் அது மட்டும் தான்! அதற்கு மேல் அவர்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பார்கள்!  காரணம் அவர்களுக்குக் கிடைக்கும்  நிதி உதவி அவ்வளவு தான்!  யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அவர் கொடுக்கின்ற நிதி உதவியிலிருந்து  இது போன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.  

பாராட்டுவோம்! என்னவோ அவர்களால் செய்ய முடிந்த உதவிகளை அவர்கள் செய்கின்றார்கள்.

இந்த முறை அரசியல்  கட்சிகள்  களத்தில் இறங்குகின்றன! அவர்களுக்கு இது தான்  மக்களைப் பார்க்க, சந்திக்க, தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பம். இதனை அவர்கள் நழுவ விடமாட்டார்கள்!

அதனால் இந்த முறை அன்பளிப்புகள் அல்லது உணவுக் கூடைகள் அல்லது பெண்களுக்குப் புடவைகள் வழங்குவது போன்ற நிகழ்வுகள் தேர்தல் காலம்வரை நீடிக்கும். அதாவது அடுத்த மாதம்  வாக்களிப்பு  நாளன்று வரை நீடிக்கும் எனலாம்!

ஆனால் நமது தமிழ் மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.  அன்பளிப்பு வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஒரு நூறு வெள்ளி பெறுமானமுள்ளப் பொருளை அன்பளிப்பு என்று கொடுத்துவிட்டு உங்களுடைய பொன்னான வாக்குகளை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அதனை மறக்க வேண்டாம்.  அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால்  அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள்! அத்தோடு அவர்கள் பணி முடிவடைந்தது! அதன் பிறகு அவர்கள் 'எஜமான்' நீங்கள் 'அடிமை'! இது தான் உங்கள் நிலை!

இதைத்தான் கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு வருகிறோம்! இப்போது இந்தத் தேர்தலில் மட்டும், அப்படியே வெற்றிபெற்றால்,  என்ன புதிதாகச் செய்துவிடப் போகிறார்கள் என்பது தான் நம் முன் உள்ள ஒரு கேள்வி!

இவ்வளவு நாள் புறக்கணித்த மக்களை இனி என்ன முன்னேற்றிவிடப் போகிறார்களா? இது நாள் செய்யாததை இப்போது மட்டும் செய்துவிட அப்படி என்ன புதிதாகக் கற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள்?  அறுபது ஆண்டுகளாக இல்லாத சமுதாய நலன் இப்போது மட்டும் பீறீட்டுக் கொண்டு வந்திருக்கிறதா?

இவர்களைப் போன்ற போலி அரசியல்வாதிகளை நம்பியது போதும். மக்கள் மீது யார் உண்மையான அக்கறைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். இதுவே நமது வேண்டுகோள்!


No comments:

Post a Comment