இது தான் வாழ்க்கையின் வினோதம்! நாம் விரும்புவதா நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறது? வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். முயற்சி செய்தால் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
இந்த இரண்டு நிகழ்வுகளுமே இந்தியா, கேரளாவில் நடந்தவை. இரண்டு நிகழ்வுகளுமே லாட்டரி குலுக்கலினால் வந்த விளைவுகள்.
ஒரு சில வாரங்களுக்கு முன்னர் வந்த செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும். ஆமாம். லாட்டரி குலுக்கில் ஒன்றில் ஓர் ஆட்டோ ஓட்டுனருக்கு முதல் பரிசான ரூ..25 கோடி முதல் பரிசு விழுந்ததாக செய்திகள் வந்தன.
மனிதர் அந்த அளவு பணத்தைப் பார்த்த அனுபவம் இல்லாதவர். பெரிய தொகையைப் பார்த்ததும் ஆர்வக் கோளாறினால் "நான் அதைச் செய்வேன்! இதைச் செய்வேன்!" என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார்!
வந்தது கேடு! கோடிப்பணம் கையிலிருந்தும் அவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை. அவரைச்சுற்றி ஏகப்பட்ட பேர் 'நான்! நீ!' என்று போட்டிப் போட்டுக் கொண்டு வந்துவிட்டனர். இருபத்து நான்கு மணி நேரமும் மக்கள் கூட்டம். அவரால் வெளியே நடமாட முடியவில்லை! வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை! ஏறக்குறைய மக்கள் அவரை வீட்டுக்காவலில் வைத்துவிட்டனர்!
"எனக்கு முன்பு இருந்த நிம்மதி, லாட்டரி விழுந்த பின்னர், இப்போது இல்லவே இல்லை! அந்த அளவுக்கு மக்கள் என்னுள் வெறுப்பை ஏற்படுத்தி விட்டனர்!" என்று புலம்புகிறார் இந்த புதிய கோடிசுவரர்!
நல்லது நினைத்தார் நடந்தது என்னவோ மனக்கசப்பு தான். அவர் மாறுவார். மாறியே தீருவார்! அதில் ஒன்றும் ஐயமில்லை!
அதே சமயத்தில் இன்னொரு கேரள நண்பரின் புலம்பல். அதையும் தெரிந்து கொள்வோம்.
ஐம்பத்திரண்டு ஆண்டு காலமாக லாட்டரி விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு நண்பர். அவருடைய 18-வது வயதிலிருந்து லாட்டரி சீட்டு எடுப்பது அவரின் வழக்கமாக அமைந்துவிட்டது. ஒரு நாளைக்கு 10 லாட்டரி சீட்டுகள் வரை அவர் எடுப்பாராம். கூலி வேலை செய்யும் அந்த நண்பருக்கு அவரது சம்பளத்தின் ஒரு பகுதி லாட்டரி சீட்டுக்கே போய்விடுமாம்!
அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்களை எல்லாம் சாக்குகளில் போட்டு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார், மனிதர்! சரி எவ்வளவு தான் வாங்கியிருப்பார் என்று எண்ணிப் பார்த்த போது அங்கு தான் அதிர்ச்சி. அவர் வாங்கிய லாட்டரி சீட்டுகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் அவர் சுமார் 3.5 கோடி ரூபாய்க்கான சீட்டுகளை இதுவரை வாங்கி இருக்கிறார்! இந்த லாட்டரிக்காக இவ்வளவு செலவு செய்திருப்பது அவருக்கே தெரியாதாம். இந்த லாட்டரி சீட்டுககளின் மூலம் இதுவரை அவருக்குக் கிடைத்த தொகை என்னவோ சுமார் ரூ 5,000 தானாம்! செலவு 3.5 கோடி வரவு வெறும் 5,000 ரூபாய்!
ஒரு கூலித் தொழிலாளி சுமார் 3.5 கோடி செலவு செய்திருக்கிறார் என்றால் இந்த 52 ஆண்டுகளில் அவர் வருமானம் என்னவாக இருந்திருக்கும்? அந்தக் கணக்குக்குள் நாம் போக வேண்டாம்.
ஒரு கூலித் தொழிலாளி என்று சொல்லப்படுகின்ற அவர் அந்தப்பணத்தை சேமித்து வந்திருப்பாரானால் அவர் இன்று கோடிசுவரனாகி இருப்பார். கூலித் தொழிலாளியும் கோடிசுவரானக முடியும் என்கிற ஒரு வெற்றிக் கதையும் உருவாகி இருக்கும்.
வாழ்க்கையில் ஒரு சில மாற்றங்களை அவர் கொண்டு வந்திருந்தால் அந்தக் "கூலித் தொழிலாளி" என்கிற அடைமொழி அவரை விட்டு அகன்றிருக்கும்!
என்ன செய்ய? நான் கூலியாகவே இருப்பேன் என்று ஒருவர் அடம் பிடித்தால் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது!
No comments:
Post a Comment