மொழிபெயர்ப்பு என்பது மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு கலை. யார் வேண்டுமானாலும் மொழி பெயர்ப்பு செய்ய முடியாது. அதற்கு மொழித்திறன், மொழி ஆற்றல் குறைந்தபட்சம் இரண்டு மொழிகளிலாவது மொழி ஆற்றல் இருக்க வேண்டும்.
தமிழில் ஒரு சொல்லை மொழிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் தமிழும், தேசிய மொழியும் அறிந்திருக்க வேண்டும். ஏதோ மேம்போக்காக ஒரு மொழியைத் தெரிந்து கொண்டு 'என்னால் முடியும்' என்று சவடால் விடுவது மலேசியர்களின் இயல்பு!
காரணம் நாம் பொதுவாகவே அலட்சியமானவர்கள்! தகுதி என்பதைவிட தகுதியற்றவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது நமது அன்றாடப் பணியாகி விட்டது!
மேலே உள்ள ஒரு வார்த்தை மிகச் சாதாரணமான ஒரு வார்த்தை. தோசை நமது இந்திய உணவுவகைகளில் ஒன்று. அதனைத் தேசிய மொழியில் கொண்டு வரும்போது THOSAI என்கிற சொற்களைப் பயன்படுத்தினாலே போதும். அனைவருக்கும் புரியும் மொழியில் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு சொல். மலேசியர்கள் மட்டும் அல்ல வெளி நாட்டவர்கள் கூட அதனை மிக எளிதாக உச்சரிக்க முடியும்.
ஆனால் நமது நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிமாற்றம் செய்யும் அரசு நிறுவனமான தேவான் பஹாசா டான் புஸ்தாக்கா யாரும் உச்சரிக்க முடியாத ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்! TOSE என்னும் ஒரு வார்த்தையை பயன்படுத்தி இது தான் சரியான வார்த்தை, இது தான் சரியான உச்சரிப்பு என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்! டோஸ் என்றால் என்ன பொருள் என்பது அதனை மொழிபெயர்த்தவருக்குத் தான் தெரியும். பொது மக்களுக்கு அந்த வார்த்தைச் சென்று சேருமா என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை!
பிழையைச் சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொண்டு அந்தப்பிழையை சரிசெய்ய முயலாமல் அது சரி என்று விதாண்டாவாதம் புரிவது அவரகளின் அறியாமையைத் தான் உலகத்திற்குப் பறைசாற்றும்! அதைத்தான் அவர்கள் விரும்புகின்றனர்!
ஒரு சாதாரண, சின்ன விஷயம். அதனைப் பூதாகாரமாக்கி, ஏதோ தாங்கள் தான் மொழியைக் காக்க வந்த காவலர்கள் போன்று காட்டிக் கொள்வது இவர்களின் இயல்பு.
பிரச்சனையைக் கொண்டு போயாயிற்று. இனி அவர்களின் வேலை. அவமானப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் அவமானப்படட்டும். மக்களின் குரலை மதிப்பவர்கள் என்றால் மதிக்கட்டும். மதிக்கத் தெரியாவிட்டால் மிதிபட்டுத்தான் ஆக வேண்டும்!
No comments:
Post a Comment