Thursday 13 October 2022

மீண்டும் உறுதி!

 

தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் தேசிய முன்னணியின் தலைவர் ஸாஹிட் ஹமிடி.

நம்புகிறோம். நம்ப முடியாததற்கு எந்தக் காரணமும் இல்லை. தேசிய முன்னணி ஆட்சியில் தாய்மொழிப் பள்ளிகள்  நிலைத்திருக்கிறது என்பது உண்மை தான். ஏன்? இருபத்திரண்டு மாத கால ஆட்சியில் கூட பக்காத்தான் அரசு தக்க வைத்துக் கொண்டது  என்பதும் உண்மை தான்.

ஆனால் தாய்மொழிப் பள்ளிகள் தங்களது அடையாளத்தை இழந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிலும் உண்மை இருக்கிறது என்பதை அறிகிறோம். அத்தோடு அரபு மொழியும் தாய்மொழிப் பள்ளிகளில் திணிக்கப்படுகிறது என்பதாகவும் கூறப்படுகிறது. இதுவும் தேசிய முன்னணி ஆட்சியில் தான் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் தேசிய முன்னணியின் தலைவர் அறிவார் என்பதும் நமக்குத் தெரியும்.

பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமான செய்திகளும் உண்டு.

புதிய பள்ளிகள் கட்டப்படுகின்றன. கட்டி ஐந்தாறு ஆண்டுகள் பின்னரும் அந்தப் பள்ளிகளைப் பயன்படுத்த கல்வி அமைச்சு அனுமதி கொடுப்பதில்லை!  அதற்கு ஏதேதோ காரணங்கள். அந்தக் காரணங்களுக்கெல்லாம் காரணம் கல்வி அமைச்சு தான். காரணம் கட்டடங்கள் கட்டுவதற்கு  அவர்கள் தானே பொறுப்பேற்கிறார்கள்? பொறுப்பேற்கிறவர்கள் தானே  அதற்கான பொறுப்பையும்  ஏற்க வேண்டும்?  இதவும் தேசிய முன்னணி ஆட்சியில் தான் நடந்து கொண்டிருக்கிறது!

பள்ளிகளில் இடப்பற்றாக் குறையால்  இணைக்கட்டடம் கட்டுகிறார்கள். அதற்கும் அதே கதி தான். அனுமதி கொடுப்பதில்லை. கட்டடங்கள் கட்டியும் பிரமச்சாரியாக நிற்கின்றன! இதுவும் தேசிய முன்னணியின் ஆட்சியில் தான் நடக்கிறது!

ஆச்சரியமான செய்தி என்னவென்றால் கட்டடங்கள் தேவை என்பதை அறிந்து தான் கல்வி அமைச்சு அதற்கான அனுமதிகளைக் கொடுத்து கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கட்டப்பட்ட பின்னர், அதற்கான அனுமதியைக் கொடுக்காமல், அப்படியே ஏதோ காட்சிப் பொருளாக வைத்திருப்பதும் கல்வி அமைச்சு தான்! மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் தேசிய முன்னணி ஆட்சியில் வீணடிக்கப்படுகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது!  இதையும் தேசிய முன்னணியின் தலைவர் அறியாமலிருப்பாரோ?

தாய்மொழிப்பள்ளிகள் தொடரும் என்கிற தேசிய முன்னணியின் உறுதிமொழியை வரவேற்கிறோம்!

No comments:

Post a Comment