Wednesday 12 October 2022

இணைந்து பணியாற்ற....!

 

வருகின்ற 15-வது பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பைக் காட்டினால் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்பது உண்மை தான்.

அதற்காக டாக்டர் மகாதிருடன் கூட்டணிவைத்துக் கொள்வது என்பதை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. காரணம் சென்ற தேர்தலில் அவர் கொடுத்த அடி யாராலும் மறக்க முடியாத ஓர் அடி! அது என்ன மறக்கக் கூடியதா? தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தையே கவிழ்த்து விட்டவராயிற்றே! அப்படி ஒரு நிகழ்வு மீண்டும் நடக்க வேண்டுமா?  அதனால் அவர் புறக்கணிக்க வேண்டிய ஒரு மனிதர் என்பது நாடறியும்!

இன்றைய எதிர்க்கட்சி என்றால் அது இன்னும் பக்காத்தான் ஹராப்பான் தான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  சென்ற முறை செய்த தவறுகளை இந்த முறையும் அவர்கள் செய்வார்கள் என்று எப்படி மகாதிர் எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை! அவர் நம்பக் கூடிய மனிதராகவும் இல்லை!

அவரின் திறமை மீது நமக்கு எப்போதும் மரியாதையுண்டு. இந்த வயதிலும் அவர் உழைக்கிறாரே அதன் மீதும்  நமக்கு மரியாதை உண்டு. ஆனால் எல்லாவற்றையும்விட அவர் நம்பிக்கைக்குரிய மனிதராக இல்லையே அதனால் தான் அவர் மலேசியரிடையே மரியாதை இழந்துவிட்டார் என்று துணிந்து சொல்லலாம்.

அவர்  நிருபர்களிடையே பேசும் போது டத்தோஸ்ரீ அன்வார் தான் தன்னோடு இணைந்து பணியாற்ற மறுக்கிறார் என்று கூறுகிறார்!  அது உண்மை தான் என்றாலும் அப்படியே அன்வார், மகாதிருடன் இணைந்து பணியாற்றினாலும்   அத்தோடு அன்வாருடைய அரசியல் எதிர்காலமும் கேள்விக்குரியதாகி விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை! அதனை அன்வாரும் அறிவார். அதே சமயத்தில் டாக்டர் மகாதிரும் அறிவார். அதனால் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

டாக்டர் மகாதிர் மட்டும் அல்ல, குறுகியகால பிரதமராக இருந்த முகைதீன் யாசின் அவர்களுக்கும் அதே கதி தான். இவர்கள் மக்களை நம்பவில்லை. பதவியே முக்கியம்; மலாய்க்காரர்களே முக்கியம் என்று வெறும் வார்த்தை ஜாலங்களைக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சை யாரும் நம்பத்தயாராக இல்லை.

துரோகிகள் வேண்டுமானால் ஒன்று சேரலாம். ஆனால் துரோகத்திற்கான பரிசு என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். துரோகிகளுக்கு எதிர்காலம் இல்லை. இனி அவர்களின் அரசியல் எட்டாக்கனி என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்!

No comments:

Post a Comment