Sunday 9 October 2022

தேர்தலுக்கு முன்பா, பின்பா?

 

       நன்றி: வணக்கம் மலேசியா                  குனோங் ரப்பாட் தமிழப்பள்ளி

பொதுவாகவே நமது கல்வி அமைச்சுக்கு ஒரு வழக்கம் உண்டு. தமிழ்ப்பள்ளிகளைக் கட்டும் போதோ அல்லது ஏற்கனேவே உள்ள  பள்ளிகளுக்குப் புதிய கூடுதல் கட்டடங்கள் கட்டும் போதோ  அல்லது புதிய  கட்டடம் கட்டி முடியும் தருவாயிலிருக்கும் போதோ வழக்கம் போல ஒரு சில ஏற்பாடுகளைச் செய்து வைப்பார்கள்.

அதாவது கட்டப்பட்ட கட்டங்களைத் திறப்பதற்கு அனுமதிப்பதில்லை. ஏதோதோ காரணங்கள் சொல்லி ஆண்டுக் கணக்கில் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்த முடியாதபடி இழுத்தடிப்பார்கள்.

அதில் ஒன்று தான் குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி. பல ஆண்டுகளாக அதன் பெயர் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளி. அறுபது ஆண்டுகளாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளி. இடப்பற்றாக் குறையால் இட மாற்றம் செய்யப்பட்ட ஒரு பள்ளி.

இப்போது அதன் பிரச்சனை என்ன?  2016-ம் ஆண்டு  இப்பள்ளி கட்டப்பட்டது.  ஆனாலும் கட்டி முடிக்கப்படவில்லை. 95 விழுக்காடு கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஐந்து விழுக்காடு அப்படியே  காட்சிக்கு வைத்திருக்கிறது கல்வி அமைச்சு.   ஏன் முழுமையடையவில்லை என்று கேட்டால் கல்வி அமைச்சு நமக்குக் கொடுக்கும் விளக்கம் ஏற்புடையதாக இருக்காது. இந்த அதிமேதாவிகள் இதனையே தேசிய பள்ளிகளுக்குச் செய்தார்களானால் அவர்கள் சோத்துக்கே திண்டாட வேண்டி வரும்!  காரணம் அவர்களது வேலையை அவர்கள் இன்னதென்று தெரியாமல் செய்கின்றார்கள் என்பது தான் பொருள்!

95 விழுக்காடு முடிக்கப்பட்ட இந்த குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளிக்கு  கல்வி அமைச்சு செய்த செலவு சுமார் 72 இலட்சம் வெள்ளி என்று சொல்லப்படுகிறது. இந்தத் தொகை 2016 ஆண்டு செலவு செய்யப்பட்ட  தொகை. அதன் பின் அந்தக் கட்டடம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இப்போது வந்த சமீபத்திய செய்தியின்படி  இந்தப் பள்ளியை அடுத்த ஆண்டு திறப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.   தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தொகுதி ம.இ.கா. தலைவரும்  அதனைப் பார்வையிட்டதாக சொல்லப்படுகின்றது.

ஒரு பள்ளி திறக்கப்பட வேண்டும் என்றால் ஒரு பொதுத்தேர்தல் தேவைப்படுகிறது! அது தான் தேசிய முன்னணியின் சிறப்பு அம்சம்! இன்னொன்று தேர்தல் சமயத்தில் தான் இவர்கள் போய் பார்வையிடுவார்களாம், ம.இ.கா. உட்பட! அதுவும் ஒரு சிறப்பு. இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். 2016-ம் ஆண்டு 72 இலட்சம் செலவு. இப்போது 2022  ஆண்டும் இன்னொரு 72 இலட்சம் தேவைப்படும். கேட்டால் பொருள்கள் விலை ஏறிவிட்டன என்று பதில் வரும்!

மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்று இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அவனவன் அப்பன் வீட்டுப் பணம் என்றால் வயிறு எரிந்து சாவான். இது மக்கள் வரிப்பணம்.நாம் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வரும் வரிப்பணம். ஆளத்தெரியாதவன் ஆட்சி செய்தால் ஆடுகளும் நடனமாடும்!

இப்போது இன்னொரு கடைசிக் கேள்வி. இந்த ஐந்து விழுக்காடு வேலை தேர்தலுக்கு முன் நடந்தேறுமா அல்லது தேர்தலுக்குப் பின்பா? தேர்தலுக்குப் பின்பு என்றால்  இன்னொரு அரோகரா!

No comments:

Post a Comment