Tuesday 11 October 2022

வெள்ள அபாயத்தை எதிர்கொள்வீர்!

 

மலேசியர்கள் கடுமையான பெருவெள்ள அபாயத்தை அடுத்த மாத வாக்கில்  எதிர்நோக்க வேண்டி வரும் என்று  கணிக்கப்பட்டிருப்பதை பேரரசர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.  

அரசாங்க  அமைப்புகள், பொதுமக்கள் வெள்ள அபாயத்தை தவிர்க்க தகுந்த  முன்னேற்பாடுகளைச்  செய்து கொள்ளவும், நிவாரண உதவிகளைத்  தக்க சமயத்தில் கொண்டு சேர்க்கவும், துரிதமாக செயல்படவும் பேரரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த மாதம் இருக்கட்டும்.  இப்போதே கடும் மழையும், வெள்ளமும் நாட்டை அலைகழித்துக் கொண்டிருக்கின்றன  என்பதும் உண்மை. பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது.  வீட்டை விட்டு வெளியேறுவதற்கே யோசிக்க வேண்டியுள்ளது! எப்போது மழை பெய்யும் என்று யூகிக்க முடியவில்லை. தொடர்ந்தாற் போல் மழை; அப்புறம் கடும் வெயில்!  அப்புறம் மழை! இப்படித்தான் மழை மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது!  மழை எப்போது வரும் என்பதை யூகிக்க முடியவில்லை!

ஆனால் ஒரு சோகம்.  மலேசியர்கள் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் போது  நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்! மக்கள் இப்போது தேர்தல் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் நாலைந்து  பேர் கூடி எப்போது தேர்தல் வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்! மக்களின் குரல் எடுபடவில்லை; மகேசர்கள் குரல் தான் எடுபடுகிறது! இதைத்தான் மக்களாட்சி என்கிறோம்!

நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டு அறுபது நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.   நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அதனைத் தொடர்ந்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும்  மாநிலங்களில்  சட்டமன்ற தேர்தல் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரே காரணம் தான்.  பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் காலம் இருப்பதால் அப்போது  சட்டமன்றத் தேர்தல் நடத்தினால் போதும் என்பது அவர்களது பார்வை.  முழுமையாகவே அவர்கள் ஐந்து ஆண்டுகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். அதிலும் தவறில்லை. அடுத்த தேர்தலில்  மாநில சட்டமன்றம் யார் கையில் போகும் என்பது யாருக்குத் தெரியும்?

எப்படியோ,  ஒரு பக்கம் வெள்ளம்; ஒரு பக்கம் தேர்தல்.  இந்த காலகட்டத்தில் பல அதிசயங்கள் நடக்கலாம். வேட்பாளர்கள் படகுகளில் போய்  மக்களைச் சந்திக்கலாம்!  மக்கள் படகுகளில் உட்கார்ந்துகொண்டே பிரச்சாரங்களைக் கேட்கலாம். எதற்கும் சாத்தியம் உண்டு.

தேர்தலும் நடக்க வேண்டும். வெள்ள  அபாயத்தையும் தவிர்க்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதற்கு முன் மக்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இல்லை. தேர்தல் ஆணையத்திற்கும்  அந்த அனுபவமில்லை. அதனாலென்ன?  மக்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கட்டும்!

No comments:

Post a Comment