Thursday 27 October 2022

ஏமாற்றியது போதும்!

 

போதும்! போதும்! மக்களை ஏமாற்றியது போதும்! எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்?

அதற்கு ஒரு முடிவே இல்லையா? மக்களின் ஒரே ஆயுதம் என்றால் அது வாக்குச்சீட்டு மட்டும் தான். அது மிகவும் பலமான ஆயுதம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். இந்த முறை அது சீக்கிரமாகவே வந்துவிட்டது! அதற்கும் ஒரு காரணம் உண்டு. தேர்தலில் தாங்கள் தோற்றால் கம்பி எண்ண வேண்டி வரும் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்!  அதில் ஒன்றும் சந்தேகமே வேண்டாம்! அது நடக்கத்தான் செய்யும்! நீங்கள் தோற்கத்தான் போகிறீர்கள்!

காலாகாலத்திற்கும் மக்களை மடையர்களாக நினைத்துக் கொண்டும் ஏமாற்றிக்கொண்டும் திரிபவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.  அடி முட்டாள்களை அதிதூதர்களாக நினைத்து மிக உயரத்துக்கு அவர்களை வளர்த்துவிட்டு விட்டோம்! இப்போது அவர்கள்  தூ! தூ!  என்று  நம்மைத் துப்பி எறிகிறார்கள்!

குறிப்பாக  இந்திய வாக்காளர்களுக்கு  நாம் சொல்ல வருவதெல்லாம் கொஞ்சம் யோசியுங்கள். எனக்கு வேண்டியவன், எனக்கு வேண்டாதவன்  என்று நினைத்துக் கொண்டு வாக்களிக்கப் போவாதீர்கள். இத்தனை ஆண்டு காலம் நம்மை எப்படி எல்லாம் ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பதைப் பின்நோக்கிப் பாருங்கள்.

எத்தனை  ஆண்டு காலம் பொருளாதார ரீதியில் நம்மை மொட்டை அடித்திருக்கிறார்கள்,  பாருங்கள். கொஞ்சமா நஞ்சமா?  அந்த திட்டம், இந்த திட்டம் - அடாடா! நம்மை அப்படியே  மேலே மேலே துக்கிக் கொண்டு போய் அப்படியே  'பொத்'தென்று கீழே தூக்கி வீசினார்களே, மறந்து விடாதீர்கள்.

இனிமேலும் நாம் அப்படியே இருக்கத்தான் வேண்டுமா? அவர்கள் நம்மை ஏமாற்றுவார்கள். நாம் அப்படியே பார்த்துக்கொண்டும் தலையாட்டிக் கொண்டும் இருக்க வேண்டுமா?

நம் வீட்டுப் பிள்ளைகள் கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற்றும் நமக்குப் படிக்க இடம் கொடுக்க யோசிக்கிறார்கள்; கொடுப்பதும் இல்லை! அவர்கள் வீட்டுப்பிள்ளைகள் மக்காக இருந்தாலும் வெளிநாடுகளிலே படித்துக் கொண்டு இருக்கிறார்கள்! கல்வியில் சிறந்து விளங்கினால் கூட அதனை  மதிக்கத்தெரியாத அடிமுட்டாள் அரசியல்வாதிகள் இவர்கள்! மறந்து விடாதீர்கள்!

ஏன்? பட்டம் பெற்று வருகிறார்களே அவர்களுக்கு வேலை கொடுக்கும் திறன் இவர்களிடம் உண்டா?  சிங்கப்பூர் இல்லையென்றால் நமக்கு வேலை வாய்ப்பை யார் கொடுப்பார்? இப்படி நமது அரசியல்வாதிகளால் நமக்கு ஏகப்பட்ட குளறுபடிகள்.

போதும்! போதும்! போதும்! பொறுத்தது போதும்! பொங்கி எழும் காலம் வந்துவிட்டது! இனியும் வாய்மூடி மௌனியாக இருந்தால் நமக்குப் போதாத காலம்!

No comments:

Post a Comment