இந்திய சமூகத்திற்கான தொலைநோக்கு மேம்பாட்டுத் திட்டம்/
நமது சமூகத்தின் மேம்பாட்டுக்காக எத்தனை மேம்பாட்டுத் திட்டங்கள்! எத்தனை தொலை நோக்குத் திட்டங்கள்! நமது கண்களில் கண்ணீர் வழியும் அளவுக்குத் திட்டங்கள் வந்துவிட்டன!
போதாதற்கு மித்ரா என்று சொல்லி அது வேறு இந்தியர்களின் மேம்பாட்டினை மிதமிஞ்சி மிதிமிதி என்று மேம்பாடடைய செய்துவிட்டது!
இப்போது தொலைநோக்குத் திட்டம் என்றாலே பயப்படுகின்ற அளவுக்கு தொலைதூரம் போய்விட்டது! ம.இ.கா. வின் தொலைநோக்குத் திட்டங்கள் ஒன்றா, இரண்டா அவைகள் எல்லாம் எங்கே போயின என்று கூட இப்போது தெரியவில்லை.
ஆனாலும் ம.இ.கா. அதனை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு ஆண்டு மாநாட்டிலும் தொடர்ந்து அரசாங்கத்திற்கு இந்தியர்கள் முன்னேற்றம் அடைய திட்டங்களைக் கொடுத்துக்கொண்டே வருகிறது! தலைவர்களும் எந்தவொரு கூச்சநாச்சமில்லாமல் அதனை கைநீட்டி வாங்கிக்கொண்டு வெளியே போனதும் அதனை அப்போதே மறந்துபோய் விடுவார்கள்! இது எப்போதும் உள்ள ஒரு பிரச்சனை தான்.
இந்தத் திட்டங்களினால் இந்தியர்களுக்கு அறவே பயனில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. ம.இ.கா. தலைவர்களை எடுத்துக் கொண்டால், முன்பும் பின்பும், தலைவர்கள் அனைவருமே செல்வமிக்கவர்களாகத்தான் இருக்கிறார்கள்! அப்படியெல்லாம் யாரும் ஏமாந்தவர்கள் இல்லை! ஏமாந்தவர்கள் என்றால் அது சாதாரண மக்கள் தான். தொலைநோக்குத் திட்டங்களை வைத்து பயனடைந்தவர்கள் தலைவர்கள் தான்! மித்ரா என்றாலும் அவர்கள் தான் பயன் அடைந்தார்கள். அரசாங்கம் இந்தியர்களுக்கென்று எதையாவது ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தால் அதனால் பயனடைபவர்கள் தலைவர்கள் தான்.
இப்போது பக்காத்தான் ஹராப்பான் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தலுக்கு முன்பே தொலைநோக்குத் திட்டத்தை பக்காத்தான் தலைவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நல்லெண்ணமாக இருக்கலாம். நல்லது நடக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். இதுவும் இந்தியர்களின் நலன் கருதி தான்!
இவர்களும் புதிதாக எதையும் கேட்கப்போவதில்லை. ஏற்கனவே ம.இ.கா. என்ன கேட்டதோ அதைத்தான் இவர்களும் கேட்கப் போகிறார்கள். எப்போதும் உள்ள இந்தியர்கள் தானே இருக்கிறார்கள்? தலைவர்கள் வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். மக்களில் எந்த மாற்றமும் இல்லை!
இருந்தாலும் நமக்குச் சகிப்புத்தன்மை அதிகம். எத்தனை அடி அடித்தாலும் தாங்கிக் கொள்வோம்! எத்தனை திட்டங்களைக் கொடுத்தாலும் பார்த்து, சிரித்தேப் பழக்கமாகிவிட்டது! அவர்கள் கொடுத்தார்கள் எதுவும் ஆகவில்லை. இவர்கள் கொடுக்கிறார்கள். ஏதோ ஒரு நம்பிக்கை. காரியங்கள் ஆகலாம் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண்போகாது என்கிற நம்பிக்கை.
பார்க்கலாம்! ஏதோ ஒரு பலன் இல்லாமலா போய்விடும்!
No comments:
Post a Comment