Wednesday 5 October 2022

அறுபத்து நான்கு நமது பலமா?

 

மலேசிய நாட்டில் குறைவான எண்ணிக்கையில் தான் இந்தியர்கள்  உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் நமக்கு அரசியல் பலம் இல்லை என்கிற எண்ணம் எழுவது இயல்பு. அப்படித்தான் சராசரி மக்களாகிய நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அரசியல் ஆய்வாளர்கள் "அது அப்படியல்ல, இந்தியர்களின் பலம் அவர்களுக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார்கள். ஆமாம்,  நாம் ஒன்றுபட்டால் அரசியலில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்த முடியும்  என்கிற உண்மை நமக்குத் தெரியவில்லை. யானையின் பலம் யானைக்குத் தெரியாததால் தான் அது பிச்சை எடுக்கிறது! நமது நிலைமையும் அது தான்!

ஆய்வுகளின்படி நமது நாட்டின்  222 நாடாளுமன்ற தொகுதிகளில் சுமார் 64 தொகுதிகளில் நமது பங்கு அதிகமாகவே இருக்கிறதாம்.  அப்படியென்றால் இந்த 64 தொலுதிகளில் இந்திய வாக்காளர்கள் அதிகம் என்று சொல்ல வரவில்லை.  இந்திய வாக்காளர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் நாம் யார் பக்கம் நமது ஆதரவைத் தருகிறோமோ அந்த வேட்பாளர் வெற்றி பெறும் தகுதியைப்  பெறுகிறார் என்று தான் அந்த ஆய்வு சொல்லுகிறது!

இப்படி ஒரு வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வது தான் நமது புத்திசாலித்தனம். கொஞ்சம் கூட இந்தியர்களின் நலனின் மீது அக்கறையில்லாதவர்களை எல்லாம் காலங்காலமாக ஆதரித்து கடைசியில் அவர்கள் தான் கல்லா கட்டினார்களே தவிர நம்மை செல்லாக்காசாக்கி விட்டார்கள்!

ஆனால் நம்ம தலைவர்கள் ரொம்பக் கெட்டிக்காரர்கள்! 22 மாத கால ஆட்சியில் பக்காத்தான் அரசாங்கம்  இந்தியர்களுக்கு  என்ன செய்தது என்பதற்கு 'உங்களது  பட்டியலைக் காட்டுங்கள்' என்கிறார்கள்! இவர்களது 60 ஆண்டு கால ஆட்சியில் இவர்களால் எதையும் காட்ட முடியவில்லை!

ஆனால் இவர்களின் கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பார்த்தால் நமக்குப் பொறாமையாய் இருக்கிறது. அம்னோ கட்சி மலாய்க்காரர்களை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். சீனர்களைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை. அவர்களின் பொருளாதார வளர்ச்சியே அதற்கு அடையாளம். அடுத்த பெரிய கட்சியான ம.இ.கா. இந்தியர்களுக்குச்  செய்த  சாதனை என்று எதனைச்  சொல்லலாம்? சிறையில் இந்தியர்கள் அதிகம். கஞ்சா வழக்குகளில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். வேலையில்லா பிரச்சனைகள் அதிகம். உயர்கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவு.  இப்படிப் பல பல குறைபாடுகள் இந்திய சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது! 

இந்த நிலையில் நாம் ம.இ.கா. வை நம்புவதில் என்ன பயன்?  இப்போது இரண்டு மூன்று ஆண்டுகளாக இவர்கள் தான் பதவிகளில் இருக்கின்றனர்.  இப்போதும்  ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு  எழவே இல்லை.  தமிழ்ப்பள்ளிகள்,     மெட் ரிகுலேஷன், மித்ரா   போன்ற எந்த ஒரு விடயத்திலும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் செனட்டர் பதவி, பட்டங்கள் அனைத்துக்கும் போட்டிப் போட்டுக்கொண்டு  முன்  நிற்கின்றனர்! இது மட்டும் தான் உரிமை மற்றவைகள் எல்லாம் உறி மையா?

இது நமக்கு நல்ல நேரம். நமது பலத்தைக்காட்ட வேண்டிய நேரம்.  அறுபத்து நான்கு தொகுதிகளின் வெற்றியை நம்மால் தீர்மானிக்க முடியும் என்றால் நமது பலத்தைக் காட்டுவோம்!

No comments:

Post a Comment