இந்திய மாணவர்களுக்குக் கல்லூரிகளில் குறைந்த அளவே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பதை இதோ கண்கூடாகக் காண்கிறோம்..
இது இன்று நேற்றல்ல காலங்காலமாக நடப்பவை தான். அன்று கோட்டையில் இருந்தவர்கள் ம.இ.கா.வினர். அனைத்தையும் கோட்டைவிட்டு கொட்டாவி விடக்கூட நேரமில்லாமல் தூங்கிக் காலத்தைக் கழித்தனர். அவர்கள் தான் இப்போது மார்தட்டுகின்றனர்! காலத்தின் கொடுமை என்பதைத் தவிர சொல்ல வேறு என்ன?
செனட்டர் டத்தோ சிவராஜ் கேட்ட கேள்விக்குச் சுகாதார அமைச்சு கொடுத்த பதில் நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவ உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 72208 பேர். ஆனால் அவர்களில் பயிற்சிக்கு எடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 பேர் மட்டுமே என்பது நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகத்தான் பார்க்கிறோம்.
இன்றைய நிலையில் இந்திய மாணவர்களுக்கு உயர்கல்விக் கூடங்களில் இடங்கள் மறுக்கப்படுகின்றன என்பது மட்டும் அல்ல அவர்கள் விரும்பும் துறைகளும் கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்படும் துறைகளும் பெரும்பாலும் டிப்ளோமா அளவுக்கு மட்டுமே. இதோ மேலே குறிப்பிட்ட மருத்துவ உதவியாளர் பயிற்சி என்பது மருத்துவருக்கான கல்வி அல்ல. அப்படியிருந்தும் உதவியாளர் பயிற்சிக்குக் கூட நமது மாணவர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.
விண்ணப்பம் செய்த மாணவர்கள் 72,000 பேர் என்றால் இவர்கள் அனைவரும் தகுதி இல்லாதவர்களா? இவர்களால் மெரிட், கோட்டா என்று எப்படிப் பார்த்தாலும் தடுப்புச் சுவர் பலமாக நிற்கிறது. உள்ளே நுழைய முடியவில்லை. இதனிடையே உயர்கல்வி அமைச்சரும் தனது பங்குக்கு மலாய் மாணவர்கள் மெரிட் அடிப்படையில் தான் சேர்க்கப்படுகிறார்கள் என்கிறார்! அப்படியென்றால் இந்திய மாணவர்கள் நிலை என்ன? இவர்கள் மெரிட், கோட்டா எதிலுமே வருவதில்லை!
மடானி அரசாங்கம் இந்தியர்களை வீழ்ச்சி நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதில் ஐயமில்லை. கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு எதிலுமே முன்னேற வாய்ப்பில்லாமல் தடை போடுவதாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. பிரதமர் அன்வார் இந்தியர்களையும் பூர்வகுடிகளின் நிலைக்கு மாற்றிவிடுவார் போல் தோன்றுகிறது!
No comments:
Post a Comment