
குற்றவாளிகளைப் பாவபுண்ணியம் பார்க்காமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை.
ஆனால் திரங்கானு மாநிலத்தில் சமீபத்தில் ஷாரியா நீதிமன்றம் கொடுத்திருக்கும் பிரம்படி தண்டனை மலேசியர்களான நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத, நடைமுறையில் இல்லாத, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய தண்டனை என்பதில் ஐயமில்லை.
குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டான். அதற்கானத் தக்க தண்டனை அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்தத் தண்டனையை வழக்கமான சிறையில் கொடுத்தால் நமக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் நாலு பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பொது வெளியில் தான் கொடுப்போம் என்றால் அதனை எந்த மலேசியரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.
ஷரியா நீதிமன்றம் கொடுத்திருக்கும் இந்தத் தீர்ப்பின் மூலம் ஷரியா நீதிமன்றம் தனது வரம்பை மீறிவிட்டதாகக் கூறுகிறது மனித உரிமை ஆணையமான சுகாக்காம். நீதிமன்றம் தண்டனையைக் கொடுக்க வழக்கமான சவுக்கடிக்கான நடைமுறையைக் கையாள வேண்டுமே தவிர அதனைப் பொது வெளியில் கொடுக்க அதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் கூறுகிறது மனித உரிமை ஆணையம்.
அதிகாரம் இல்லாத ஒன்றின் மேல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனைப் பொதுவெளியில் நிறைவேற்ற நினைப்பது தான் அதிகாரத் துஷ்பிரயோகம் என்பது. இல்லாத சட்டத்தை இருப்பதாகக் கூறி தண்டனையை நிறைவேற்றுவோம் என்பதே மக்களை ஏமாற்றுவது தான். ஆனால் மக்களால் எதுவும் செய்ய முடியாது என்கிற அகங்காரம் தான் அரசியல்வாதிகளை இப்படியெல்லாம் செய்யச் சொல்கிறது.
தண்டனை பள்ளிவாசல் வளாகம் ஒன்றில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் சுமார் 70 பேர் கலந்துகொள்வர். அவர்கள் பெரும் பெரும் வி.ஐ.பி. க்களாகக் கூட இருக்கலாம். இவர்களைப் பாதுகாக்க காவல்துறை 40 போலிஸ்காரர்களைக் களம் இறக்கியிருக்கிறது.
இது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று தெரிகிறது. இந்தத் தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்பதே நமது பிரார்த்தனை.
No comments:
Post a Comment