Friday, 6 December 2024

எகிறிய காய்கறி விலைகள்!

மழை எப்போது வரும், வெள்ளம் எப்போது வரும்  என்று ஒரு கூட்டம்  எப்போதும் எதிர்பார்த்துக்  கொண்டிருக்கும்.   அப்போது தான் பழைய விலைக்கு வாங்கிய காய்கறிகள் கூட புதிய விலையில்  விற்பதற்கு சந்தைக்கு வரும்.  அப்போது தான் அவர்களும் கொஞ்சம் அதிகமாகவே காசு பார்க்கலாம்.   ஆசை யாரை விட்டது?

யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை.  ஒருபக்கம் பற்றாக்குறை என்றால்  இன்னொரு பக்கம்  வியாபாரிகளுக்கு அதிக இலாபம் என்பது உள்ளே புகுந்து விடுகிறது!  எதுவும் புதிதல்ல. நாம் எல்லாவற்றுக்கும் பழக்கப்படுத்திக் கொண்டோம்.  வேறு வழியில்லை.

அப்போது தான்  ஒரு சிலருக்குப் போதிமரத்து ஞாபகம் வரும்.  வீட்டு முன் இரண்டு மூன்று காய்கறி செடிகளை நட்டுவைத்திருந்தால் கூட இந்த நேரத்தில்  நமக்கு உதவுமே  என்று!  நாம் எப்போதும் இப்படித்தான். இருக்கும் போது சட்டை செய்வதில்லை இல்லாத போது நாலாப்பக்கமும் கண்கள் அலையும்!  சொல்லிப் பயனில்லை.  இப்படியே நாம் பழக்கப்படுத்திக்  கொண்டோம்.

எந்தக் காலத்திலும், இது போன்ற நேரங்களில்,  நாம் பாடம் படிப்பதில்லை.  கையில் காசு இருக்கும் போது  படோடாபம் காட்டுவதும் காசு இல்லாத போது  அரசாங்கத்தைக் குறை சொல்லுவதும் நமக்குப் பழக்கமான ஒன்று!  நடப்பவை இயற்கைப் பேரிடர்.  யார் என்ன செய்ய முடியும்? நாம் தான், குறைந்தபட்சம், கொஞ்சமாவது, தயார் நிலையில் இருக்க வேண்டும்.

என்ன செய்யலாம்? வழக்கம் போல எல்லாரும் சொல்வது தான். இட வசதி இருந்தால் அதனை முழுமையாகப்  பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சில காய்கறிகளை  நட்டு வையுங்கள்.  கஷ்ட நேரத்தில் அந்த செடிகள் நமக்குக் காய்கறிகளைக் கொடுத்து உதவும்.  பிரமாண்ட காய்கறித் தோட்டமாக இல்லையென்றாலும்  உங்கள் வீட்டுக்குத் தேவையான  ஓரளவு காய்கறிகளை  அது ஈடுசெய்யும்.

அரசாங்கத்தைக் குறை கூறுவதில் பயனில்லை.  யாரும் உதவப்போவதில்லை. நம் கையே நமக்கு உதவி. பிறர் கையை எதிர்பார்க்காதே என்பது தான் அதன் பொருள்.  விலைவாசி ஏற்றம் எல்லாரையும் தான் பாதிக்கிறது. நம்மை மட்டும் அல்ல.  அரசாங்கம்  செய்ய வேண்டிய வேலையைச் செய்யத்தான் செய்கிறது.  நம் பங்குக்கு நாம்  என்ன செய்கிறோம்?  நம் கடமையை நாம் செய்ய வேண்டும்.

எல்லாவற்றுக்கும் வழிகள் உண்டு. குறைகளையே சொல்லிக் கொண்டிருக்காமல்  நாம் என்ன செய்ய முடியும் என்பதை யோசியுப்கள்.

No comments:

Post a Comment