Thursday, 19 December 2024

இப்படியும் ஒரு நம்பிக்கையா!

என்ன தான் மனிதன்  'நாகரிகமடைந்து விட்டோம்'  என்று சொல்லிக் கொண்டாலும்  அவனிடம்  ஏதோ ஒரு மூட நம்பிக்கையாவது  இருக்கத்தான் செய்யும்.   இதில் கருப்பன் , வெள்ளையன், வெங்காயம்  என்கிற பாகுபாடு எல்லாம் இல்லை; அனைவரும் சமம்!

இந்த குறிப்பிட்ட சம்பவம் வட இந்தியா,  சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு நபர், யாரோ ஒரு மந்திரவாதி  சொன்னார்  என்பதற்காக உயிருள்ள  கோழிக்குஞ்சு ஒன்றினை  அப்படியே விழுங்கியிருக்கிறார்.   அது மேலேயும் போக முடியாமல், கீழேயும் இறங்க முடியாமல், தொண்டையில் மாட்டிக்கொண்டு,   அந்த மனிதரை மூச்சுவிடாதபடி படாதபாடுபட வைத்து அவருடைய உயிரையே போக்கிவிட்டது. 

மரணமடைந்த முப்பத்தைந்து வயதான ஆனந்த் யாதவ்  என்னும் பெயர் கொண்ட அந்நபரை உடற்கூறாய்வு  செய்தபோது  தான் அவர் தொண்டையில் கோழிக்குஞ்சு ஒன்று  உயிரோடு சிக்கிக் கொண்டிருப்பது  மருத்துவர்களை  அதிர்ச்சியடையச் செய்தது.  

மருத்துவர்களுக்கு முதலிலேயே தெரிந்திருந்தால்  ஒருவேளை அந்த மனிதர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.  ஆனால்   மருத்துவமனைக்குப் போகும்போதே  அவர் சடலமாகத்தான்  கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். கோழிக்குஞ்சாவது காப்பாற்றப்பட்டதே  என்று திருப்தியடைய வேண்டியதுதான்! 

மருத்துவம், புதிய கண்டுபிடிப்புகள்  என்று எத்தனையோ ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.  சாதாரண மனிதர்களிடம் போய் சேருவதில்லை  என்கிற குறை இருந்தாலும்  இப்போதெல்லாம் அதுவும் குறைந்து பல தகவல்கள் ஊடகங்கள் மூலம் வெளியாக்கப்படுகின்றன.  தேவை என்றால் தேடத்தானே செய்கின்றோம்.

ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் மந்திரவாதிகளை மட்டும்  நம்பாதீர்கள். ஜோசியர் சொன்னார், போமோ சொன்னார்,  அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை நம்பாமல் , குறிப்பாக குழந்தை பேறு போன்ற விஷயங்களில்,   மருத்துவரை மட்டும் நம்புங்கள் என்று மட்டும் தான் நாம் ஆலோசனை  கூற முடியும்.

நம்பிக்கை வேண்டும் தான் ஆனால் இது போன்ற குருட்டு நம்பிக்கை  வேண்டவே வேண்டாம்.


No comments:

Post a Comment