எத்தனையோ ஆண்டுகளாக, அதாவது வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே, நாட்டில் சிறைகள் உள்ளன. ஆனால் இத்தனை ஆண்டுகாலம் இல்லாத சிறப்பு சிறைக்கைதி ஒருவருக்கு இந்த ஆண்டு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
14 வயதில் செய்த ஒரு கொலை குற்றத்திற்காக போதை பித்தர்களுக்கான காஜாங் சிறைசாலையின் மறுவாழ்வு மையத்தில் கடந்த 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த வந்த முராட் என்னும் அந்தக் கைதி இன்று விடுதலை செய்யப்பட்டார். சிலாங்கூர் சுல்தானின் பிறந்த நாளன்று அரச மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலையானார்.
சிறையில் இருந்த காலத்தில் அவரின் சாதனை தான் என்ன? அவர் சிறையில் இருந்தவாரே முதலில் எஸ்.பி.எம்., டிப்ளோமா கல்வி, இளங்கலை, முதுகலை முடித்த பின்னர் பி.எச்.டி. என்னும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. சிறையில் இருந்து கொண்டே பல ஆண்டுகள் கல்வி மீதான உழைப்பைப் போட்டு அதன் மூலம் இத்தகைய சாதனையை அவர் புரிந்திருக்கிறார். கொலைக் குற்றச்சாட்டு அவர் மீது இருந்தாலும் அவர் கல்வி பயில, திருந்தி வாழ, சிறைத்துறையும் அவருக்கு நல்ல ஒத்துழப்பைக் கொடுத்து அவரை இப்படி ஒரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நல்ல முயற்சி. பாராட்டத்தான் வேண்டும்.
மலேசிய சிறை வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்திருப்பது இதுவே முதல் முறை. குறைவான அளவில் ஓரிருவர் கற்றிருக்கலாம் ஆனால் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு யாரும் முனைப்புக் காட்டியதில்லை. அந்த வகையில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டவர் இந்த மனிதர் முராட் ஆகத்தான் இருக்க முடியும்.
சின்னஞ்சிறு வயதில் இப்படி ஒரு சூழலில் சிக்கிக்கொண்ட முராட் அதனையே மாற்றி சாதனையாளராக தன்னை மாற்றிக் கொண்டார் என்பது பெருமைக்குரிய செயல் என்பதில் சந்தேகமில்லை.
இதில் நமக்குக் கிடைக்கும் பாடம் தான் என்ன? எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும் கல்வி ஒன்று தான் நமது ஆயுதம். கல்வி இருந்தால் பல கதவுகள் நமக்காகத் திறக்கும். அதில் பெண் கல்வி இன்னும் முக்கியம். ஒரு குடும்பத்தின் அடுத்தக்கட்ட உயர்வுக்குக் கல்வியில் பெணகளின் பங்கு என்பது மிகவும் முக்கியம்.
இதோ முராட் சிறைக்கதவுகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு வெளியே வந்துவிட்டார். அதற்குச் சிறையில் இருந்து கொண்டே அவர் பெற்ற கல்வி தான் வழிவகுத்தது! வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment