Thursday, 12 December 2024

அரச மாநகரில் தூய்மைக்கேடா?

சிலாங்கூர் மாநில  அரச மாநகரில் தூய்மைக்கேடு பற்றி  தனது கவலையைத் தெரிவித்திருக்கிறார் சிலாங்கூர் சுல்தான் அவர்கள்.

யார் யாரோ குறை சொன்னார்கள் எதுவும் எடுபடவில்லை.  இப்போது ஆட்சியாளர்களே  களத்தில் இறங்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது!  யார் சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளாத  அரசாங்க ஊழியர்களை என்ன செய்ய முடியும்?

சில நாள்களுக்கு முன்னர் தான் சுல்தான் அவர்கள் பள்ளிவாசல்களில்,  வெள்ளிக்கிழமை தொழுகைகளில், சமய நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகைகளில்  பேசாதீர்கள் என தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும் ஒரு பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறார் சுல்தான் அவர்கள்.  அரசு ஊழியர்கள் யார் பேசினாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை  என்று உறுதி பூண்டிருக்கிறார்கள்.  ஆனால் சுல்தான் குரலுக்குச் செவி சாய்க்காமல்  இருக்கச் முடியுமா?  அதனையும் பார்த்து விடுவோம்.

சிலாங்கூர்மாநிலம் மட்டும் அல்ல மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சுத்தத்தோடும், சுகாதாரத்தோடும்  இருப்பது தான் குடிமக்களாகிய நமக்குப் பெருமை.   நகரங்கள் சுத்தமாக இருந்தால், சுகாதாரத்தோடு இருந்தால்  நமக்கு மட்டும் பெருமை அல்ல வெளிநாட்டவரும்  இந்நாட்டிற்கு வருகைதர விரும்புவார்கள்.  இன்றைய நிலை என்ன? நம் அருகில் இருக்கும் சிங்கப்பூரைத் தான் யார் வந்தாலும் பெருமையாகப் பேசுகிறார்கள்.  நம் பக்கத்தில் இருக்கும் நாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

நாட்டின் தூய்மைக்காக  கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பெரும் படையையே வைத்திருக்கிறோம்.  அவர்களை வேலை செய்ய   வைக்க வேண்டும்.  அதைச் செய்யத்தான் யாராலும் முடியவில்லை.  சரி,  உள்ளூர்க்காரன் தான் வேலை செய்ய சோம்பறித்தனம் பண்ணுகிறான். என்றால் இப்போது வேலை செய்யும் வங்காளதேசியும் அதையே தான் பண்ணுகிறான்! எங்கே போய் முட்டிக்கொள்ள!

ஒன்று மட்டும் உறுதி. அவரவர் தனது கடமையைச் செய்ய வேண்டும். அது தான் இன்றைய பிரச்சனை. எல்லாரும் கடமையைச் செய்ய வேண்டும் என நினைக்கிறோமே தவிர  நாமும் தான் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம். இது ஒரு கூட்டு முயற்சி.  ஊர் சேர்ந்து தான் தேர் இழுக்க வேண்டும். அறிவுரை மற்றவருக்கு மட்டும் அல்ல நமக்குந்தான்!


No comments:

Post a Comment