ஆண்டின் கடைசி நாள். ஒரு வருடம் ஓடிவிட்டது. என்னத்தை சாதித்தோம் என்று புரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் வரும் போகும். சாதித்தது என்ன என்பது தான் புரியாத புதிர்!
சரி அதை விடுவோம். மலேசிய இந்தியர்கள் இந்த ஆண்டு என்ன மனநிலையில் இருந்தார்கள் என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகமாக உச்சரித்த பெயர் என்றால் அது பிரதமர் அன்வாரின் பெயராகத்தான் இருக்க வேண்டும்.. அவரைப்பற்றி நல்லது பேச யாருக்கும் மனம் வரவில்லை. திட்டி தீர்த்தவர்கள் தான் அதிகம்.
"தேர்தலுக்கு முன் எம்.ஜி.ஆர். வேடம் போட்டார். தேர்தலுக்குப் பின் எம்.என்.நம்பியாராக மாறிவிட்டார்!" என்பது தான் இந்தியர்கள் அவர் மீது வைத்த பொதுவான குற்றச்சாட்டு. "எண்பது விழுக்காடு ஓட்டுப்போட்டு அவரைத் தேர்ந்தெடுத்தோம் ஆனால் பதவிக்கு வந்த பின் நம்மை அப்படியே ஒரங்கட்டிவிட்டார்!" என்கிற கோபம் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!
அதுவும் உயர் கல்வி, தமிழ் கல்வி, பொருளாதாரம் என்று வரும்போது எங்கோ போய் ஓடி ஒளிந்துகொள்கிறார் என்று இந்தியர்கள் குற்றம்சாட்டும் அளவுக்கு அவர் நடந்து கொள்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அன்று அவர் பேசியது வேறு. இன்று அவர் அரசியலில் தொடர்ந்து பேர்போட வேண்டுமென்றால் மலாய்க்காரர்களின் ஆதரவு அவசியம் என்னும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். அதனால் அவரின் அரசியல் பாதை மாறிவிட்டது.
இப்போது முன்னாள் பிரதமர் நஜிப் கொஞ்சம் நல்லவராக இந்தியர்களின் கண்களுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டார். நிறைய நல்லது செய்திருக்கிறார் என்கிறார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். எல்லாம் காரணமாகத்தான் ஆடும். அப்படி ஒரு சூழல் இருந்தபோது, அவரை வைத்து, நம் அரசியல்வாதிகள் பெரிதாக அப்படி என்ன சாதித்துவிட்டார்கள்? அவர்களுக்காக சாதித்துக் கொண்டார்களே தவிர மக்களுக்கு என்ன சாதித்தார்கள்?
நாம் குறைகளைச் சொல்லியே வீழ்ந்து போன சமுதாயம். இருப்புவனை வைத்துக் கொண்டே மேலே ஏறுவதற்கு என்ன செய்யலாம் என யோசிப்போம். நமது எண்ணங்களை மாற்றி சிறப்பாக வாழ முயல்வோம்.
No comments:
Post a Comment