Sunday, 22 December 2024

இது தாத்தாக்களின் காலம்!

இது தாத்தாக்களின் காலமோ என்னவோ தெரியவில்லை! ஒரு பக்கம் கிறிஸ்துமஸ் தாத்தா  உலகமெங்கிலும்  ஆட்டமும் பாட்டமுமாய்  இருக்கிறார். ஸீ தமிழ் தொலைகாட்சியின் சிறுவர்  பாடல்  போட்டி நிகழ்ச்சியில்  தாத்தாவும் பேரனும் தமிழ் உலகைப் பாடிக்  கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.  

இன்று உல்கினர் அனைவரும் பேசுவது:  ஒரு  தாத்தா நினைத்தால்  உலகப்புகழ் பெறுமளவுக்கு ஒரு பேரனை நல்லதொரு பாடகனாக உருவாக்க முடியும் என்பது தான். இந்தப் பேரனைப் பார்த்த பிறகு அவன் பாடல்களைக்   கேட்ட பிறகு யார் தான் அதனை மறுக்க முடியும்?

தாத்தாவுக்குச் சங்கீதம் தெரியாது. முறையான சங்கீதப்பயிற்சி இல்லை. பயிற்சி பெறவும் வழியில்லை.  ஏதோ அவருக்குத் தெரிந்த பாடல்களைப் பாடத் தெரியும் என்பதைத்தவிர எந்த ஒரு வித்துவானிடமும்  சங்கீதம் கற்றதில்லை. எல்லாமே சுயம்புவாகவே கற்றுக்கொண்டது தான்.

ஏதோ  சுயம்புவாகக் கற்றுக் கொண்ட அந்தக்கலையை  பேரனும் கற்றுக்கொண்டு பாட வேண்டும்  என்று நினைத்துத்தான்  அவ்னுக்கு அவரே பயிற்சி அளித்திருக்கிறார்.  ஆமாம், எல்லாமே கசடறக்கற்று பின்னர் தான் பயிற்சி அளிக்க வேண்டும் என்றால் அதற்கு வழியில்லை. தெரிந்ததை வைத்து  பேரனைப் பெரிய பாடகனாகவே ஆக்கிவிட்டார். அது தான் தாத்தாவின் பலம். யாரையும் எதிர்ப்பார்க்கவில்லை. என்ன தெரிந்ததோ, தெரிந்ததைச் சொல்லிக் கொடுப்போம்  என்னும் தன்னம்பிக்கை தான்  அவரது  ஆற்றல்.

நமக்கு நல்லதொரு பாடத்தைக் கொடுத்திருக்கிறார்  தாத்தா.  எந்தக் கலையும் சரி பூரணமாகக் கற்ற பின்னரே பிறருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால்  எதுவும் நடக்காது.  முதலில் தெரிந்ததை கற்றுக் கொடுங்கள்.  பின்னர் அவர்களுக்கே ஆர்வம் வந்தவுடன் அவர்களே கற்றுக் கொள்வார்கள்.

மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். .  தாத்தாக்களிடம் நிறைய அனுபவங்கள் உண்டு. ஏதோ ஒரு வகையில்  ஒரு சில வித்தைகளை அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற துடிப்பு  அவர்களிடம் இருக்கும்.  அதனை முடக்கி விடாதீர்கள் என்பது தான் நமது வேண்டுகோள்.

திவினேஷ் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சங்கீதக் கலையை  சிறப்பாகக் கற்று  சிறப்புற வேண்டும்  என்பதே நமது பிரார்த்தனை.

No comments:

Post a Comment