Wednesday, 4 December 2024

இது தான் சில்லறைத்தனம் என்பது!


 பினாங்கு மாநிலத்தின் முன்னாள்  துணை முதலமைச்சர்  பேராசிரியர் இராமசாமி  வெளிநாடு போவதற்குத்  தடை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு முந்தைய வாரம் தான் அவர் தாய்லாந்து போய் வந்திருக்கிறார். அப்போது எந்தத் தடையும் அவருக்கு இருக்கவில்லை. அப்போது  எந்தக் குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்படவில்லை.

அவர் இந்தோனேசிய, ஆச்சேயில் அவருக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த  சமாதான விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளதற்காக  பயணம் செய்யப்படவிருந்த நேரத்தில்  இந்த்த் தடை உத்தரவு, அதுவும் விமான நிலையத்தில், அவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது  ஏன் என்பது நமக்குப் புரியவில்லை.

கோடிக்கணக்கில் அசாங்கத்தை ஏமாற்றியவர்கள் கூட வெளிநாடு போக  அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பேராசிரியர் அப்படியெல்லாம்  ஏமாற்றியவர் என்று சொல்லுவதற்கு வழியில்லை.  அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யக் கூடாது என்பதாக நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்தத் தடைவிதிப்புக்கு  யாரோ பின்னால் இருந்து செயல்படுகிறார்கள்  என்பதாகச் சொல்லப்படுகிறது,  அந்தப் 'பின்னால் இருப்பவர்கள்'  ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  யார் இதைச் செய்திருந்தாலும் கெட்ட பெயர் வாங்குபவர் என்னவோ பிரதமர் அன்வார் தான்.  இந்திய சமூகம்  பிரதமர் அன்வார் மீது  நம்பிக்கை இழந்து வருகிறது  என்பது அனைவருக்கும் தெரியும்.  இந்த நேரத்தில் இது போன்ற சில்லறைத்தனமான  வேலைகள் எல்லாம்  பிரதமருக்குத் தான்  கெட்ட பெயரை வாங்கிதரும் என்பதை உணர வேண்டும்.

பேராசிரியர் இராமசாமி அவர்களைச் சிறுமைபடுத்த வேண்டும்  என்று நினைப்பவர்கள்  ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அவரை எதிரிகளாக நினைக்கலாம்.  ஆனால் அவர் தமிழர்களின் தலைவராகத்தான் கருதப்படுகிறார். என்ன தான் அவதூறுகளை அவர் மீது பரப்பினாலும்  அதனை யாரும் நம்பப் போவதில்லை.

பேராசிரியருக்கு அமைதிக்கான பரிசு பெறுவதில் யாருக்கோ குத்துகிறது, குடைகிறது  என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

No comments:

Post a Comment