Wednesday, 11 December 2024

வங்காள தேசத்தில் என்னதான் நடக்கிறது?

                                         வங்காள தேசத்தில் இனப்படுகொலையா?

வங்காள தேசத்தில் நடைபெறுவது  சிறுபான்மை  மக்களின் மீதான இனப்படுகொலை என வர்ணித்திருக்கிறார்  அந்நாட்டின் முன்னாள் பிரதமர்  ஷேக் ஹசினா வாஜிட்.  பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல வங்காளதேசத்தின் அரசியலை தனது நுனிவிரலில் வைத்திருப்பவர்  தான் ஷேக் ஹசினா.

அது இனப்படுகொலை தான் என அந்த முன்னாள் பிரதமர் உறுதிப்படுத்துகிறார்  என்றால் நிச்சமாக அது நூறு விழுக்காடு உண்மையாகத்தான் இருக்க முடியும். அந்த இனப்படுகொலைக்கு இலக்கான  அந்த சிறுபன்மையினர் யார்?  அவர்கள் இந்துக்களும் மற்றும் கிறிஸ்துவர்களும் அடங்கும்.  வங்காள தேசத்தின் மக்கள் தொகையின் 8  விழுக்காட்டினர் சிறுபான்மையினர்.

நமது நாடாளுமன்ற இந்து   சமயத்தைச் சார்ந்த  உறுப்பினர் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து  அவர்கள் நடத்திய  செய்தியாளர் கூட்டத்தில்  மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்  இதன் தொடர்பில் குரல் கொடுக்க வேண்டும் என   வலியுறுத்தியிருக்கின்றனர்.

இங்கு நடப்பது இனப்படுகொலை மட்டும் அல்ல வழிபாட்டுத்தலங்களும்  உடைக்கப்படுகின்றன.  இது அரசாங்கத்தின் ஆதரவுடன்   அதாவது இடைக்கால  பிரதமர் முகமட் யூனூஸ்  ஆசியுடன் தான் நடப்பதாகக் கூறப்படுகின்றது.  இடைக்கால பிரதமர் போய் நிரந்தர பிரதமர்  என்கிற நிலை வரவேண்டுமானால்  இது போன்ற  மதக்கலவரங்கள் அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுகின்றன.  ஏன் இந்துக்களின் தாயகமான  இந்தியாவிலும்  இது தான் நடந்து கொண்டிருக்கிறது!

இவர்களுடைய நோக்கமெல்லாம்  அரசியல்வாதிகள் வாழவேண்டுமானால்  மதக்கலவரங்கள்  அவசியம் தேவை என்பது தான்! நம்முடைய நோக்கமெல்லாம்  மதக்கலவரங்கள் என்கிற பெயரில் எதுவும் வேண்டாம். அது கண்டிக்கப்பட வேண்டும்.  அதற்குச் சரியான நபர் நமது பிரதமர் தான்.  இஸ்லாமிய உலகில் மேல் மட்டத்தில் இருப்பவர். அவர் குரல் எழுப்பும் போது அதற்குப் பலம் அதிகம்.

நமது நாடாளுமன்ற இந்து உறுப்பினர்களின் குரல் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  பாலஸ்தீனத்திற்கு மட்டும் தான் குரல் கொடுப்பாரா? பார்ப்போம்!

                                     

No comments:

Post a Comment