Monday, 16 December 2024

அப்பாடா! கொஞ்சம் ஆறுதலடையலாம்!

நாலாபக்கமும் அடி உதை விழுந்தபிறகுதான்  மித்ரா கைகால்களை ஆட்டத் தொடங்கியுள்ளது!   இத்தனை ஆண்டுகள்  இந்தியர்களிடமிருந்து  அந்நியப்பட்டுக் கிடந்த மித்ரா  இப்போதாவது  விழித்தெழுந்ததே என்பதில் நமக்கும்  மகிழ்ச்சியே!

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்காக ஐம்பது இந்திய மாணவர்களுக்கு  வாய்ப்புகள் வழங்க  பெர்டானா பல்கலைக்கழகமும்  மித்ராவும்  ஒப்பந்தம் செய்தன. ஐம்பது மாணவர்களில் பத்து மாணவர்களுக்கு முழு உபகார சம்பளமும் மற்றும் ஏனைய நாற்பது  மாணவர்களுக்குப் பகுதி  உபகார சம்பளமும் வழங்க  ஒப்புதல் வழங்கப்பட்டன.  அத்தோடு பகுதி உபகார சம்பளம் பெறும் மாணவர்களுக்கு PTPTN  கடனுதவியும் செய்து தரப்படும்.

இந்த அறிவிப்பு என்பதே  தாமதமாக வந்தது தான். விண்ணப்பம் செய்யும் கடைசி நாள் 17.12.2024.  தாமதமென்றாலும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு  இந்த செய்தி உடனடியாகக் கிடைத்திருக்கும்  என நம்பலாம்.

இந்த செய்தியை நல்ல செய்தியாகவே நாம்  பார்க்கிறோம். ஓரளவு   மித்ரா- இந்தியர் உருமாற்றுத்திட்டத்தில் - அக்கறை எடுக்க ஆரம்பித்திருக்கிறது என்று நம்மால் உணர முடிகிறது.  பி40 மக்களுக்காகவே இந்தத் திட்டம்  உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் பி40 யின் கீழ்தான்  வருவார்கள். அதுவும் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர்  பலர் பி40 க்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

வருகின்ற சில செய்திகளைப் பார்க்கின்ற போது  இந்தத் திட்டத்திற்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்கிற செய்திகள் வெளியாகின்றன.  ஆனால் அதற்கான காரணம்  தாமதமாக செய்தி வெளியானது தான்.  இது முதலாண்டு என்பதால் தான் இந்த சுணக்கம். வருகிற ஆண்டுகளில்  தேவைகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

எப்படியோ நல்லதே நடக்க வேண்டும். இறைவனைப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment