Wednesday, 22 January 2025

இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள்

தமிழ் திரையுலகில்  முதன் முதலாக இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் யார்  என்கிற பேச்சு அவ்வப்போது நம்மிடையே எழுவது வழக்கம்.  அவர் நடிகர் அல்ல நடிகை கே.பி.சுந்தராம்பாள். அவர் நடித்த "பக்த நந்தனார்"  என்கிற படத்துக்கு ஒரு இலட்சம்  ரூபாய் சம்பளம் வாங்கினாராம்.   ஒரு சுவாராஸ்யமான செய்தி. அப்போதெல்லாம் திரைப்படங்கள்  எடுக்க கையில் 30,000 ரூபாய் இருந்தால் போதுமாம். அப்படி ஒரு காலகட்டத்தில் தான் அவர்  ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார்.  படமும் செம ஓட்டமாம்..  


நடிகவேள் எம்.ஆர். ராதா பற்றி  தெரியாதவர் யார்?  எந்த  வேடத்திலும் நடிக்கக் கூடியவர்.  எந்த வேடத்தில் நடித்தாலும்  அவருடைய  சொந்த சரக்குகளையும்  "திணிக்கக்"   கூடியவர்   அவர் நடித்த எல்லாப் படங்களிலும் சீர்திருத்த கருத்துகளுக்குப் பஞ்சமில்லை. அவர் நடித்த முதல் படமான ரத்தக்கண்ணீர்  படத்திற்கு வாங்கிய சம்பளம் 1,25,000 ரூபாய்.  அவருக்கு எவ்வளவு சம்பளம்  கொடுக்க வேண்டும்  என்று தயாரிப்பாளர் அறியாத நிலையில்  நடிகவேள் அவர்களே கேட்டு வாங்கிய சம்பளமாம்!  அவருடைய பேச்சுக்கு யார் எதிர்பேச்சு  பேசுவார்? ஒரு சுவாராஸ்யமான  செய்தி என்னவென்றால் அவருக்கு எழுத, படிக்கத் தெரியாதாம்>  ஆனால் அவர் ஒரு படிக்காத மேதை என்பதில் ஐயமில்லை

அடுத்து நகைச்சுவை நடிகர் ஜே.பி.சந்திரபாபு . தனது நகைச்சுவை நடிப்பால் தமிழ் திரையுலைகை  ஒரு கலக்குக் கலக்கியவர்.  அவர் நடித்த "சகோதரி" என்கிற திரைப்படத்திற்கு  ஒரு இலட்சம் ரூபாய் வாங்கியவர். அதற்கான காரணம்  படம் ஆரம்பத்தில் தயாரான போது  தயாரிப்பாளருக்குப் படம் திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் அப்போது நகைச்சுவையில் பிரபலமாக இருந்த சந்திரபாபுவை அணுகி அவருக்கென்று தனியாக நகைச்சுவை காட்சிகளை அமைத்து  படத்தை வெற்றிபெறச் செய்தாராம் தயாரிப்பாளர். அந்த நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தவரே சந்திரபாபு தானாம்!  அதற்கான சம்பளம்  அவருக்கு ஒரு இலட்சம்  ரூபாய் கொடுக்கப்பட்டதாம்.


  குறிப்பு:           இந்த விவரங்களைச் சொன்னவர் சித்ரா லட்சுமணன். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்  இப்படி பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். நீண்டகாலமாக  தமிழ்  திரையுலகில்  இருப்பவர்.  சினிமா உலகைப்பற்றி முற்றும் அறிந்தவர். எண்பது ஆண்டுகள் தமிழ் சினிமா என்பது பற்றி புத்தகம் போட்டவர்.  ஆக, அவர் கொடுத்த ஆதாரங்களின் படி  இந்தச் செய்திகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment