Monday, 27 January 2025

சீன புத்தாண்டு


சீனர்களின் புத்தாண்டு வந்துவிட்டது.

ஏதோ இரண்டு நாள் விடுமுறை என்று மட்டும் நினைத்துவிட்டு  "அவ்வளவு தான் சீனர் புத்தாண்டு' என்று  முடித்துக்கொண்டு விடாதீர்கள்.  சீனர்களும்  மற்ற இனத்தவர்களைப் போல  குடியேறிவர்கள் தான்.  ஏறக்குறைய எல்லாருமே ஒரே காலகட்டம்.

ஆனாலும் அவர்களின் வளர்ச்சி  என்பது பூதாகாரகரமான  வளர்ச்சி.  ஆனால் நாம் வளரவேயில்லை. நாட்டின் அடிமட்ட வளர்ச்சியில் இருக்கிறோம்.  நாம் வளரக்கூடாது  என்று  யாரும் சொல்லவில்லை.  யாரும் தடையாக இல்லை.  

பொருளாதாரத்தில் முன்னேற அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.  முன்னேற வேண்டும் என்னும் துடிப்பு அவர்களிடம் இருந்தது.  நம்மிடம் அது இல்லை.  மிக மிக அண்மையில் தான்  நாம் வளர வேண்டும் என்கிற எண்ணமே  நமக்கு வந்திருக்கிறது.

சீனர்களில் பெரும்பாலானவர்கள்  வியாபாரத்துறையைச் சார்ந்தவர்களாக  இருக்கிறார்கள். போட்டி பொறாமை என்பதை  அவர்களிடம் பார்க்க முடியவில்லை.  புதிதாக ஒரு சீனன் வியாபாரத்திற்கு வந்தால்  அவன் அந்தப் புதியவனை  ஏற்றுக்கொள்கிறான். நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீண்ட நாள்களாக அவர்கள் வியாபாரத்தில் இருப்பதால்  அப்படியொரு பக்குவத்திற்கு அவர்கள்  வந்துவிட்டார்கள்.  நம்மால் முடியவில்லை.  நாளடைவில் நமக்கும் வந்துவிடும்.

துறைக்கு நாம் புதியவர்களாக இருப்பதால்  சில பல குறைகள் நம்மிடம் உண்டு. ஆரம்பம் அப்படித்தான் இருக்கும்.  காலப்போக்கில் சரியாகிவிடும்.  நம்மிடம் இருக்கும் இந்த கசப்புகளை  ஒதுக்கிவிட்டு  நாம் சீனர்களின் வியாபார உத்திகள், திறமைகள், கொடுக்கல் வாங்கல்  போன்றவைகளை அறிந்து புரிந்து கொள்வது  நமது முன்னேற்றத்திற்கு நலம் பயக்கும்.

தொழில் செய்வது எப்படி? என்று உலகத்தைச் சுற்ற வேண்டாம். நம் பக்கத்தில் இருக்கும் சீனர்களைப் பார்த்தாலே போதும். வந்து விடும்! நமக்கு அவர்கள் ஒரு படிப்பினை!

No comments:

Post a Comment