ம.இ.கா.வின் கல்வி நிறுவனமான MIED, ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில பல்வேறு உயர்கல்விக்கு வழிவகுத்திருக்கிறது.
பாராட்டத்தான் வேண்டும். காரணம் நமது அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்கள் விரும்பும் துறைகளில் வாய்ப்புகளைக் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. தகுதி இல்லை என்றால் நம்மால் எதுவும் செய்ய இயலாது. ஆனால் தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் கொடுக்கவில்லை என்றால் அது மாணவர்களை மட்டும் அல்ல சமுதாயத்தையும் பாதிக்கும்.
அந்த சூழ்நிலையைச் சமப்படுத்த ஏம்ஸ்ட் பலகலைக்கழகம் உதவும் என்கிற நம்பிக்கை இப்போது தான் பிறந்திருக்கிறது. மருத்துவக் கல்வி என்றால் அரசாங்கம் வாய்ப்புக் கொடுப்பதில்லை. அதனால் நமது சமுதாயத்திற்குத்தானே பாதிப்பு? இன்றைய நிலையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தான் உதவுகின்ற நிலை. இப்போது பல நிறுவனங்கள் குறைந்தபட்சம் கல்விக்கடனுதவி கொடுத்து உதவுவது ஆறுதலாக இருக்கிறது.
அவர்களோடு MIED யும் சேர்ந்து கொண்டு இருப்பது வரவேற்கக் கூடியதே. வாய்ப்புகள் கொடுக்கின்றன, உபகாரச் சம்பளமும் கொடுக்கப்படுகின்றது, பல்வேறு துறைகளில் பயிலவும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன - பாராட்டலாம். முன்பெல்லாம் ஏம்ஸ்ட் சீனர்களுக்குத்தான் என்கிற குற்றச்சாட்டு ஒருவேளை இப்போது குறைகிறதோ, தெரியவில்லை!
எது எப்படி இருந்தாலும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போவதில் யாருக்கும் பயனில்லை. இப்போது, இன்றைய நிலையில், வாய்ப்புகள் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான் நமது ஆலோசனை. இந்திய மாணவர்கள் அனைவருக்குமே அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கப் போவதில்லை. அவர்களுடைய கொள்கையே வேறு. மெரிட் என்பார்கள், கோட்டா என்பார்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வார்கள்! அப்படித்தான் அவ ர்களது கொள்கை இருக்கும். அரசாங்கத்தை எதிர்பார்த்தால் எதுவும் நடக்கப்போவதில்லை.
நமது மாணவர்களை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான். தனியார் நிறுவனங்கள் என்றால் கல்விக்கடன் பெறுங்கள். உபகாரச் சம்பளத்திற்குத் த்குதியானவர் என்றால் அதற்கும் மனு செய்யுங்கள். இன்னும் என்னன்ன இருக்கின்றனவோ அத்தனைக்கும் மனு செய்யுங்கள். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்கி விடாதீர்கள். ஒரு வாசல் மூடினால் ஒன்பது வாசல்கள் திறந்திருக்கும் மறந்து விடாதீர்கள்.
ஏம்ஸ்ட் பலகலைக்கழகம் இன்னும் இது போன்ற பிற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் நமது மாணவர்களுக்காக காத்திருக்கின்றன.
நல்லதொரு எதிர்காலம் நமக்குண்டு/ வாழ்த்துகள்!
No comments:
Post a Comment