Tuesday, 28 January 2025

கேஜே சொன்னது சரிதான்!


முன்னாள் சுகாதார அமைச்சர்  கைரி ஜமாலுதீன் சரியானநேரத்தில் சரியான கருத்தைக் கூறியிருக்கிறார்.  மற்ற முன்னாள் அமைச்சர்களோ அல்லது இந்நாள் அமைச்சர்களோ இதனைக் கூறியதில்லை. அவர்கள் அறியவும் இல்லை. ஆனால் பிரதமர் அன்வார் அறிந்திருக்கிறார்.

கைரி கூறியது:"மலாய்க்காரர் அல்லாதோரின் வலிகளுக்கு  நிவாரணம் அளித்தால் NEP  கொள்கை மீதான  அவர்களின் அதிருப்தி தணியும்."

ஆமாம் அதைத்தான் காலங்காலமாக நாம் கூறி வருகிறோம்.  மலாய்க்காரர்களுக்கு எத்தனை சலுகைகள் வேண்டுமானாலும் கிடைக்கட்டும்.  ஆனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளை எங்களிடமிருந்து பறிப்பதைத்தான்  நாங்கள்  அதிருப்தி அடைகிறோம்.  எங்கள் மாணவர்கள் இரவும் பகலும் படித்து  அனைத்துப் பாடங்களிலும் "ஏ" வாங்கிய பின்னரும்  அவர்களின் உயர்கல்விக்குத் தடையாக இருந்தால்  அவர்கள் என்ன தான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தியர்களைப் பொறுத்தவரை கல்வியும், பொருளாதாரமும் எட்டாக்கனிகள் தாம்.  இரண்டுமே எட்டாத நிலை என்றால் அதற்கு  அரசாங்கமே தான் தடை போடுகிறது. அப்படியென்றால் நீங்கள் படிக்கவும் வேண்டாம் பொருளாதாரமும் பவேண்டாம் என்று தானே சொல்ல வருகிறீர்கள்? 

ஒரு  சாதாரண ஏழை இந்தியன்  சாலை ஓரங்களில் சிறு சிறு கடைகள் கூட போட முடிவதில்லை. நன்றாகக் கடை நடக்கும் நாள்களில்  நகராண்மைக் கழகம்  அனைத்தையும் உடைத்துவிட்டுப் போய்விடுகிறது. ஒரு சில மாதங்கள் கழித்துப் பார்த்தால்  அங்கு மலாய் நண்பர்களின் கடைகள் நடக்கின்றன.  இதனை என்னவேன்று சொல்லுவது?

இந்தியர்களின் கல்விக்கும் தடை,  அவர்கள் செய்யும் சிறு சிறு தொழிலுக்கும் தடை  அவர்கள் வேலைகளையும் வெளிநாட்டவர்கள் பறித்துக் கொண்டனர் அங்கும் தடை - அப்படியென்றால் இந்தியர்களின் வளர்ச்சிக்கு யார் தடையாக இருக்கிறார்கள்?  அரசாங்கம் பல வழிகளில் இந்தியர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

கைரி சொல்லுவது போல் நமது இனத்தவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை, கொடுக்க வேண்டியவைகளைக்  கொடுத்தால்  பிரச்சனைகள் குறையும். இல்லாவிட்டால் இந்தியர்கள் பொங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். அதுவே ஒரு நாள் வெடிக்கத்தான் செய்யும். 

No comments:

Post a Comment