அரசாங்கம் நமக்காக - நம் மக்களுக்காக - எந்தத் திட்டங்களையும் போடுவதில்லை என்பது எப்போதோ நமக்குத் தெரிந்தது தான். அதுவும் கல்வி என்று வரும் போது நாம் ஒதுக்கப்படுகிறோம் என்பதை நாம் தெரிந்துதான் வைத்திருக்கிறோம்.
அதற்காக நாம் கல்வியை ஒதுக்கி விடவில்லை. சொத்துகளை விற்றாவது பிள்ளைகளுக்குக் கல்வி கொடுப்பது தான் நாம் வழமையாகக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இப்போது கல்விக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் நாம் தீவிரமாக இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய நமது நோக்கம்.
இடைநிலைக் கல்வியை முடித்துவிடலாம். அது தானாக நடக்கும். நமது தேவையெல்லாம் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். நமது கவனம் அதில் தான் இருக்க வேண்டும். பெற்றோர்களின் பங்கு இன்னும் அதிகம். பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்த வழியில்லை.
ஆனால் நம்மிடையே இன்னும் பலர் கல்வி பற்றிய அறியாமையில் தான் இருக்கின்றனர். கல்வி தான் நம்மை அடுத்த உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்கிற அறிவு இல்லாமல் இருக்கின்றனர். நாம் தோட்டப்புறங்களில் பார்த்திருக்கிறோம். மூன்று நான்கு தலைமுறை அங்கேயே வேலை செய்து எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறோம்.
அந்த நிலைமை மாற வேண்டும். கல்வியின் முக்கியத்துவம் அறிந்தவர்களாக பெற்றோர்கள் இருந்தால் தான் நமது வருஙாலத் தலைமுறை மாறும். அதுமட்டுமல்ல வாழ்க்கைத்தரமும் மாறும். நாமும் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
இந்த ஆண்டை இந்தியர்களின் கல்வி ஆண்டாக நாமே கையில் எடுத்துக் கொண்டு இந்திய மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நம்மிடையே ஏகப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன அல்லது தனிப்பட்ட முறையில் கூட நமது மாணவர்களுக்கு உதவ வேண்டும். இப்போது வழிகாட்டுதல் தான் முக்கியம். வழிகாட்டுதல் இல்லாததால் தான் பல மாணவர்கள் உயர்கல்வியைப் பெற முடியவில்லை.
நம்மால் முடிந்தவரை வழிகாட்டியாய் இருக்க முல்வோம்.
No comments:
Post a Comment