Sunday, 12 January 2025

சட்டவிரோத வியாபாரிகள்!


 வெளிநாட்டினர் நம் நாட்டில் நிரந்தரமாகக் தங்கிவிடுவதும் இங்கு வியாபாரம் செய்வதும் பொது மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஆனால் யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தெரியவில்லை. அது எப்படி என்பது தான் நமது  கேள்வி.  மக்கள் தாங்களாகவே சில முடிவுகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று  வெளிநாட்டவர் இந்நாட்டில் எந்தத் தொழிலையைம் செய்யலாம். அதற்கு அரசாங்கம் எந்த மறுப்பையும் சொல்லப் போவதில்லை.

அது உண்மையாக இருக்குமோ என்று நினைத்தால்  அதனை நம்மால் மறுக்கவும் முடியவில்லை.  காரணம் எங்குப் போனாலும்  அவர்கள் தான் எல்லா இடங்களிலும்  வியாபித்திருக்கின்றனர். பல இடங்களிலும் வியாபாரம் செய்கின்றனர்.  எல்லாத் தாமான்களிலும் அவர்களின் கடைகள் இருக்கின்றன.  இதில் என்ன  ஏற்றுக்கொள்ள முடியவில்லை  என்றால்  இவர்கள் எல்லாம் பூமிபுத்ராக்கள் பட்டியலில் வந்து விடுகின்றனர்!  என்றும் சொல்லப்படுகின்றது!  அது எந்த அளவுக்கு உண்மை என்பதை  நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.  ஒரு வேளை பொது மக்களே தாங்களாகவே அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்களோ என்பதும் புரியவில்லை!

அவர்கள் எல்லாம் முறையான உரிமம்  வைத்துக் கொண்டு தான்  வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் சட்டவிரோதமானவர்கள் என்றும் நம்மால்  சொல்ல முடியவில்லை. ஏனோ இந்தக் குளறுபடிகள் என்பதும் நமக்கும் எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

திடீரென அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதும் அவர்களுடைய பொருள்களை அபகரிப்பதும் எல்லாமே  ஏதோ ஒப்புக்கு சப்பாணி  என்பதாகவே தோன்றுகிறது. முதலில் அவர்களுக்கு உரிமம் எப்படி வழங்கப்படுகிறது என்பதற்கான  தெளிவில்லை. அப்படியே அவர்கள் ஏதேனும் வியாபாரங்களில்  ஈடுபடும் போது அப்போதே ஆரம்பகாலத்திலேயே ஏன் எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது பாய்வதில்லை?  இவர்களை வளர்த்து விடுபவர்கள் யார்?  அரசாங்கம் தான்! வளர்ந்த பிறகு அவர்களுடைய கடைகளுக்குச் சீல் வைப்பதும், சிறு வியாபாரங்களை இழுத்து மூடுவதும் ஏதோ தமாஷ் என்பதாகத்தான் தோன்றுகிறது! மக்களை முட்டாளாக்குகிறார்கள்  என்பதைத் தவிர வேறென்ன?

நம்மை முட்டாளாக்குகிறார்கள், அவ்வளவு தான்!

No comments:

Post a Comment