Sunday, 5 January 2025

நமது பங்கு என்ன?

 

ஒற்றுமைக்குக் காக்கைகளைச் சொல்வார்கள்.  பறவைகளில் அறிவுள்ள பறவை  காக்கைகள் தான் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த இரண்டு குணங்களும்   நமக்குத் தேவை  என்பதுதான் காக்கைகளின் கதை சொல்லுகிறது. 

அறிவு என்றால் இன்றைய நிலையில் நம்மைப் பொறுத்தவரை கல்வி தான்  அந்த அறிவு வளர்ச்சியைக் கொடுக்கும்.  மற்றவைகள் எல்லாம் பின் தள்ளப்படும். அதனால் தான் நாம் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம்.

தனிமனிதனாக, கல்வி என்று வரும்போது, நமது பங்கு என்ன என்பது தான் நமது கேள்வி. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தாலே போதும்.  நமது சமுதாயம் கல்வி கற்ற சமுதாயமாக  மாறிவிடும்.  ஏழை சமுதாயம் என்று சொல்லிக் கொண்டிருப்பதைவிட  அடுத்தகட்ட  நகர்வுக்கு நமது பங்கு என்ன என்று சிந்திக்க வேண்டும்.  அதற்குக் கல்வி ஒன்று தான் வழி. வேறு எதுவும் எடுபடாது.

இந்த செய்தியே நமது மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரியது.  ஒரு காலகட்டத்தில் தோட்டப்புற பள்ளிகளில் படித்தவர்கள் பலர் ஆசிரியர்களாக மாறிவிட்டார்கள்.  அத்தோடு கொஞ்சம் ஆங்கிலத்தைச் சேர்த்துப் படித்தவர்கள்  இன்னும் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார்கள்.   ஏன் கல்வி என்பதற்கு இந்த மாற்றங்களே போதும்.  கல்வியைக் கொடுத்துவிட்டால் அப்புறம் ஏழை என்கிற அடைமொழி தேவை இல்லை.

இதில் நமது பங்கு என்னவெனில் நாம் ஒவ்வொருமே பிள்ளைகளுக்கு வழிகாட்டிகளாக  இருக்க வேண்டும்.  பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம்.  பிள்ளைகள் பள்ளி போக ஆரம்பித்ததுமே அவர்களை நன்கு ஊக்குவிக்கவேண்டும்.  டாக்டராக வேண்டும், வழக்கறிஞராக வேண்டும் என்று என்ன தெரியுமோ அதனைச் சொல்லி  அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்க வேண்டும். இளமையில் சொல்லப்படுவது அப்படியே மனதில்  பதிந்துவிடும்.  அதன் பொருள் என்னவென்று புரியாவிட்டாலும்  அவர்களாகவே புரிந்து கொள்ளும் நேரம்வரும்.

கல்வி என்று வரும்போது பெற்றோர்கள் தான்  முதல் வழிகாட்டி. அதற்கு அவர்கள் படித்தவர்களாக  இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் மட்டும் அல்ல.  நமது சமுதாயத்தில்  உள்ள அனைவரின் பொறுப்புமாகும்.  மாணவர்கள் நன்கு படிக்கும்படி ஊக்குவிப்புத் தரவேண்டும்.   மேற்படிப்புப்பெற வழிகாட்ட வேண்டும்.  நமது சமுதாயத்தில் கீழ்மட்ட அளவில் தலைவர்கள் அல்லது பொறுப்பில் உள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். தக்கவர்களிடம் கொண்டுபோய் ஆலோசனைக் கேட்கலாம்.  வழிகள் நிறையவே இருக்கின்றன.  தேவையெல்லாம் நாம் மனம் வைக்க வேண்டும்.  நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்கிற பற்று இருக்க வேண்டும்.

சமுதாய முன்னேற்றம் என்பது நமது அனைவரின் கூட்டு முயற்சி.  அதில் நமது பங்கும் உண்டு.  கல்வி கற்ற சமுதாயம் என்றால் நமக்கும் அதில் பெருமை தான்.   

No comments:

Post a Comment