நமது மாணவர்களின் உயர்கல்விக்குக் கோவில்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக மக்களிடம் செல்வாக்குப் பெற்ற கோவில்கள் இன்று பலவகைகளில் மாணவர்களின் கல்விக்கு உதவுகின்றன.
சிறிய கோவில்கள் தான் நாட்டில் அதிகம். அவர்களின் சமூக ஈடுபாடு என்பது குறைவு தான். ஆனாலும் அள்ளிக்கொடுக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கிள்ளிக்கொடுக்காவாவது செய்யலாம். அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல முடியாது. சிறிய அளவிலாவது உதவ முடியும். உயர்கல்விக்குச் செலவிடமுடியாவிட்டாலும் சிறிய அளவில் அதாவது பள்ளி செல்ல பேரூந்து கட்டணம் போன்றவைகளைக் கவனித்துக் கொள்ளலாம். செய்யத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் எல்லா ஊர்களிலும் இருக்கின்றன. அதே போல கோவில்களும் இருக்கின்றன. பேரூந்து கட்டணத்தைக் கூட கட்ட முடியாத பெற்றோர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். அதுவும் கொரொனா பெருந்தொற்றுக்குப் பின்னர் பலர் வேலையில்லாமல் சிரமத்தில் உள்ளனர்.
பெருங்கோவில்களோ சிறு கோவில்களோ ஒவ்வொரு கோவிலும் தங்களால் முடிந்த அளவு இந்த சமூகத்திற்கு உதவத்தான் வேண்டும். கோவில்கள் மட்டும் அல்ல இயக்கங்கள், மன்றங்கள் சங்கங்கள் - இப்படி அனைவருக்குமே அந்தப் பொறுப்பு உண்டு தனி மனிதர்களுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு. எங்கு உதவிகள் கிடைக்கும் என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
எஸ்.பி.எம். தேர்வுக்குப் பின்னர் அடுத்த கட்டம் என்ன என்கிற பொது அறிவு நமது மாணவர்களுக்கு இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனாலேயே அவர்களது வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது. நாட்டில் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள் நமது சமுதாயம் தான். ஏன், வங்காளதேசிகளை விட நாம் குறைவான சம்பளம் வாங்குகிறோம். இத்தனைக்கும் நம்மை உயர்த்திக்கொள்ள ஏகப்பட்ட வழிகள் உண்டு. அதை நாம் தான் தேட வேண்டும்.
நமது கோவில்களின் பங்கு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
No comments:
Post a Comment