மலேசியாவில் தமிழர் அல்லது இந்திய இயக்கங்கள் எத்தனை இருக்கும் என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை.
சும்மா தோராயமாகக் கேட்டால் சுமார் ஆயிரம் இயக்கங்கள் இருக்கலாம். இவர்கள் நினைத்தால் நமது மக்களிடையே மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். நாம் கல்வியைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். கல்வியின் முக்கியத்துவத்தை நமது தமிழர் சமுதாயம் இன்னும் உணரவில்லை என்பதைப் புரிந்து வைத்து வைத்திருக்கிறோம்.
இந்த நேரத்தில் நமது இயக்கங்களின் பங்கு மிகவும் தேவையான ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம். நம் மக்களிடையே உள்ள பிரச்சனை என்னவென்றால் பொருளாதார சிக்கல்தான். அதனால் தான் நமது குழந்தைகள் எஸ்.பி.எம். தேர்வுக்குப் பின்னர் வேலைக்குப் போய் விடுகின்றனர். இன்றைய நிலையில் எஸ்.பி.எம். தேர்வில் பெரிய வெற்றி பெற்றால் கூட அதன் மூலம் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுமில்லை.
இன்றைய தேவை எல்லாம் உயர்கல்வி இல்லாமல் எந்த வேலை வாய்ப்பும் இல்லை என்பது தான் உண்மை. நமது இயக்கங்கள் நம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இயக்கங்களில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் விழிப்புணர்வு உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்கள் தேவை. வழிகாட்டுதல்கள் இல்லாததால் தான் இன்று பலரால் உயர்கல்வி கற்க முடியவில்லை.
மாணவர்களுக்குப் பெற்றோர்களின் வழிகாட்டுதலும் இல்லை. வழிகாட்ட ஆளுமில்லை. பலர் வெளி உலகம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். யாரோ சொன்னார் என்று சொல்வதைக் கேட்டு கடைசியில் கல்விக்கடன் என்கிற பெயரில் கடன்காரர்களாக வெளியே வருகிறார்கள். கல்விக்கடன் இல்லாமலேயே உயர்கல்வி படிக்க வழிகள் பல உண்டு. அதனைத் தெரிந்து கொள்ள அரசாங்க இணையதளங்களை வலம் வந்தாலே போதும்.
அதற்குத்தான் நமது இயக்கங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து அவர்களுக்குச் சரியான பாதையைக்காட்ட வேண்டும். இணையதளங்களில் பலர் வழிகாட்டுகிறார்கள். மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு ஆலோசனை. எக்காரணத்தைக் கொண்டும் முதலில் பணத்தைக் கொண்டு கொட்டாதீர்கள். ஒரு முறைக்கு நூறு முறை படித்துப் புரிந்து கொள்ளுங்கள். அதைவிட சரியான வழிகாட்டுதல்களை நாடுங்கள். குறிப்பாக ஆசிரியர்கள் நம்பத்தக்கவர்கள். அரசாங்க இணையதளங்கள். அதுவே போதும்.
இயக்கங்கள் சில பொறுப்புக்களையாவது எடுத்துகொள்வது மாணவர்களுக்கு வழிகாட்டுவது சிறப்பான சேவை. நல்லதே நடக்கட்டும்.
No comments:
Post a Comment