Friday, 31 January 2025

கண்பார்வை பறி போகிறதா?

இதனை நாம் அதிர்ச்சியான செய்தியாகத்தான்  எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஏனோ தானோ  என்று மேம்போக்காக படித்துவிட்டு  துடைத்துவிட்டுப் போகிற செய்தி அல்ல. 

நம் நாட்டில்  பத்து குழந்தைகளுக்கு ஒரு குழந்தை கண்பார்வை பிரச்சனையால்  அவதியுறுகிறது  என்று  குழந்தைநல  கண் மருத்துவர் ஒருவர்  பெற்றோர்களை எச்சரித்திருக்கிறார்.

பெற்றோர்கள் இதனைக் கேட்டு சும்மா கடந்து போய்விட முடியாது.  ஒரு காலத்தில் இது போன்ற கண்பார்வை பிரச்சனையைப் பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை. அதனால் ஏதோ வெவ்வேறு பெயரில் ஒரு கருத்தைச்  சொல்லி வந்தோம்.  மருத்துவர்கள்  பரம்பரை நோய்  என்றார்கள்  நாமும் ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் இன்றைய நிலை வேறு.  கைப்பேசிகள் மிக மிக ஆபத்தானவை. யாருமே நமக்குச் சொல்ல வேண்டியதில்லை.  நமக்கே தெரியும்.  ஆபத்து எனத் தெரிந்தும்  அதனைத்தான் குழந்தைகளின் கையில் கொடுக்கிறோம்.  ஒரு சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றி பெருமைப்படுவார்கள்.  அது தெரியும், இது தெரியும் என்கிற பெருமை. கடைசியில் கண்பார்வை தெரியுமா என்று யோசிப்பதில்லை. பார்வை பெற நீங்கள் செலவு செய்யத் தயார் ஆனால் கண்,  பார்வைத்தர தயாரா என்றெல்லாம் கவனத்தில் எடுத்து கொள்வதில்லை.

பெற்றோர்களே இன்றைய நவீன உலகில் மிகவும்  தரமான கண்டுபிடிப்பு கைப்பேசிகள் தான்.  நினைத்தால் உலகில் எந்தப்பகுதிகளுக்கும் பேசலாம். செய்திகளை உடனே  தெரிந்து கொள்ளலாம்.  ஆனால் அது வேறொரு வகையில் நஞ்சாகவும் மாறும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது அதில் ஒன்று கண் பறிபோவது.  அதுவும் இளசுகள் கண் பார்வையை இழந்தால்?  வருங்காலம் என்பது அவர்கள் தானே.

ஆனால்  என்ன தான் எச்சரிக்கை விடுத்தாலும்,  நீங்கள் சரியான் முடிவை  எடுக்காவிட்டால்,  என்ன சொல்லியும் எந்தப் பயனும் இல்லை.  இப்போது மென்மையாகத்தான்  எச்சரிக்க விடுக்கப்பட்டிருக்கிறது.  பெற்றோர்கள் தான் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment