புதிய ஆண்டு மலர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு கடந்து போனது. போனது மட்டும் அல்ல நமக்குத் தேவையற்றவைகளையும் அடித்துக் கொண்டுப் போய்விட்டது! போனது நல்லது தான்.
இதோ மற்றோரு புதிய ஆண்டு! இதற்கு முன் நம்முடைய எண்ணங்கள் எப்படி இருந்ததோ, தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டு நமது எண்ணங்களைக் கொஞ்சம் உயர்த்திக் கொள்வோம்.
'இப்போதெல்லாம் வீடு வாங்கவே முடியாது' என்கிற எண்ணம் உடையவரா நீங்கள்? 'இல்லை இந்த ஆண்டு வீடு வாங்கியே தீருவேன்' என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அது எப்படி இது எப்படி என்கிற எண்ணத்தை விட்டு ஒழியுங்கள். அது நடக்கும் என நம்புங்கள். உளவியல் என்ன சொல்கிறது? நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை நம்புங்கள். அது ஏதோ கற்பனை என்று நினைக்காதீர்கள். நீங்கள் என்ன விலையில் தேடுகிறீர்களோ அந்த விலையில் வீடு உங்களைத் தேடிவரும்.. இது ஒரு சிறு உதாரணம் ஆனால் அதுதான் உளவியல் என்பது. முதலில் உங்கள் எண்ணத்தில் அது வரவேண்டும் பின்னர் அது செயல்வடிவம் பெறும்.
எல்லாமே அப்படித்தான். முதலில் நீங்கள் நினைக்க வேண்டும். பிறகு அது நடக்கவே செய்யும். உங்கள் எண்ணங்கள் மிக வலிமையானது என்பதைத்தான் மீண்டும் மீண்டும் உளவியல் கூறுகின்றது. நாம் தோல்விகளையே தழுவுகிறோம் என்றால் நாம் தோல்வியைத்தான் உள்ளுர விரும்புகிறோம் என்பது பொருள்!
வாழ்க்கையில் எதனையும் சாதிக்க முடியும். அதற்கு உங்கள் எண்ணங்கள் வலிமையாக இருக்க வேண்டும். சென்ற ஆண்டு இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சில பொருளாதார முயற்சிகளைச் சிலர் எடுத்திருக்கின்றனர். இந்த ஆண்டும் அது தொடரும் என எதிர்பார்க்கலாம்.
புதிய ஆண்டு பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என நாம் நம்புவோம்.
வாழ்வோம்! வளர்வோம்!
No comments:
Post a Comment