குடித்துவிட்டு கார்களை ஓட்டாதீர்கள் என்று சொல்லுவதற்குக் கூட இப்போது பயப்பட வேண்டியுள்ளது.
காரணம் குடிக்கவே வேண்டாம் என்று சொல்லுகின்ற நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். அப்படி இருக்கும் போது அது என்ன "குடித்து விட்டு" " இப்போது நமது இளைஞர்கள் லாரி ஓட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். லாரி, பேருந்துகள், வாடகைக் கார்கள் - இதெல்லாம் ஓட்டுவதை நாம் குறைசொல்லவில்லை.
ஆனால் இங்கிருந்து தான் அதிக குடிகாரர்கள் உருவாகிறார்களோ என்கிற ஆதங்கம் நமக்கு உண்டு. அதுவும் குறிப்பாக லாரி ஓட்டுகிறார்களே இவர்கள் குடியின் பிடியில் அதிகம் ஈர்க்கப்படுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அவர்களை மட்டும் சொல்லவில்லை இப்போதைய இளைஞர் பட்டாளமே அப்படித்தான் இருக்கின்றது என நம்ப வேண்டியிருக்கிறது. இதோ எனக்குக் கிடைத்த ஒரு செய்தி. சமீபத்தில் முன்னாள் பள்ளி மாணவர் கூட்டம் ஒன்று நடந்தது. கலந்து கொண்டவர்களில் ஒரு சிலர் வங்கியில் வேலை செய்கின்றனர். ஒரு சிலர் லாரி ஓட்டுநர்கள். பெண்கள் அனைவருமே ஆசிரியைகளாக பணியாற்றுகின்றனர். இந்த ஆண்கள் மட்டும் கூட்டத்திற்குக் கலந்து கொள்ள எப்போது காரில் கால் வைத்தார்களோ அப்போதே குடி, குடி என்று கும்மாளம் போட ஆரம்பித்து விட்டனர்!. கூட்டத்திலும் அதே பல்லவி. கடைசியில் பெண்களே அவர்களுக்குப் புத்தி சொல்ல வேண்டிய நிலைமை. நல்ல வேளை எல்லாமே கட்டுப்பாட்டுக்கள் இருந்தன.
இது தான் நமது இளைஞர்கலின் இன்றைய நிலைமை. படித்தவன், படிக்காதவன் என்கிற பாகுபாடு இல்லை. குடிப்பதில் தான் அவர்களுக்குச் சுகம் கிடைக்கிறது என்றால் என்ன சொல்ல? அனைவரும் குடும்பஸ்தர்கள் தான். ஆனால் அறிவில்லையே! பிள்ளைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம், குடும்பம் இது பற்றியெல்லாம் அவர்கள் நினைப்பதில்லையே.
நாம் குடிகாரச் சமூகம் என்கிற அடையாளத்தை விட்டுவிட யாரும் தயாராக இல்லையே. அந்தக்காலம் எப்படியோ. ஆனால் இந்தக் காலத்தில் அப்படி இருக்க முடியுமா? அப்படியென்றால் வருங்காலம் எப்படி இருக்கும்? என்ன செய்ய? தலையைச் சுற்றுகிறது!
நல்லது நடக்கும் என்னும் நம்பிக்கையுண்டு. நல்லதே நடக்கட்டும்!
No comments:
Post a Comment