Tuesday, 7 January 2025

நமது இலக்கு கல்விதான்!


இன்றைய நமது தமிழ்ச்சமூகம் ஓரளாவது முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்றால்  அதற்கு முக்கிய காரணம் கல்வி மட்டும் தான்.

ஆனால் நமது ஆதங்கம் எல்லாம் ஒரு சிலர் தான் கல்வி கற்றவர்களாக இருக்கிறோம்  பலருக்கு அது இன்னும் போய்ச் சேரவில்லையே  என்கிற  மனவலி தான் நமக்கு.   நம்முடைய குற்றச்சாட்டு எல்லாம் பெற்றோர்கள்  தங்களின் பிள்ளைகளின் கல்வியில் அக்கறையற்று இருக்கிறார்களே அது தான்  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பெற்றோர்கள் அக்கறை காட்டவில்லையென்றால் பிற்காலத்தில்  பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது அக்கறை காட்டுவதில் எந்தப் புண்ணியமுமில்லை. சமுதாயம் மற்ற இனத்தவர்களின் கண்களில்  கேவலப்பட்டுத் தான் நிற்க வேண்டும்.  சீனப்பெற்றோர்கள், மலாய்ப்பெற்றோர்கள் போன்று தமிழ்ப்பெற்றோர்கள்  கல்வியின் முக்கியத்துவத்தை  இன்னும் உணரவில்லையே, என்ன செய்ய?

நாம் சொல்ல வருவதெல்லாம் பெற்றோர்கள்  எந்த நிலையிலும் தங்களின் பிள்ளைகளின் கல்வியில்  இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்பது மட்டும் தான். படிக்காத பெற்றோராக இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவாக அக்கறை இல்லாதவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் விபரம் தெரிந்த பக்கத்து வீட்டார்  அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.  அதற்கு நாம்  அனைவரும் சேர்ந்துதான் தேர் இழுக்க வேண்டும். நமது சமுதாயத்தின் உயர்வு தான் நமக்கும் பெருமை.

நமது சமுதாயம் உயர வேண்டும் என நாம் நினைத்தாலும்  நம்மிடையே உள்ள குடிகார கூட்டத்தை  அசைப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான்.  இனி அதனையும் சாக்காக வைத்துக் கொண்டு நாம் காலாட்டிக்கொண்டிருக்க  முடியாது.  இந்த ஆண்டு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி  வைக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

நமது  குழந்தைகள் படிக்க வேண்டும். நமது சமுதாயம் கல்வி கற்ற சமுதாயமாக மாற வேண்டும்.  பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்க  வேண்டும்.  படிக்கும் சூழலையும் உருவாக்க வேண்டும்.

அன்றும் இன்றும் என்றும் கல்வி தான் நமது இலக்கு. அதுவே நமது உயர்வு.

No comments:

Post a Comment