Friday, 17 January 2025

டயர்கள் கழன்று கொள்வதா?

                                      
சமீபகாலமாக தொடர்ச்சியாக இந்தச் செய்திகளைப் படிக்கிறோம். லாரிகளின் டயர்கள் கழன்று  போகின்றன, அதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன.

அத்தோடு இன்னொரு செய்தியும்  கூடவே வருகின்றது:  இது தான் மடானி அரசாங்கம்! என்கிற அடைமொழி. நாட்டில் எந்தத் தவறுகள் நடந்தாலும்  அதற்குக் காரணமானவர் பிரதமர் என்கிற குற்றச்சாட்டு. அது ஏன்? இதற்கு முன்னர் எப்போதோ ஒரு முறை நடப்பது  இப்போது  அடிக்கடி நடப்பதும் ஒரு காரணமாகும். 

நடக்கும் விபத்துகளும் அப்படி ஒன்றும் அலட்சியப்படுத்தக் கூடியதாக இல்லை.  மரணத்தை ஏற்படுத்துகின்றது.  அல்லது மேலே பாருங்கள்.  லாரி டயர் ஒன்று கழன்று வந்து ஒரு மனிதரை இடித்துத் தள்ளியிருக்கிறது. அவருக்கு முதுகிலும் கால்களிலும் நல்ல அடி. அது அவருக்கு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.

இது போன்ற சம்பவங்கள் முன்பெல்லாம் அங்கொன்று, இங்கொன்றாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது.  எங்கோ அதிகாரத்தில் உள்ளவர்கள் முற்றிலுமாக பொறுப்பு துறப்பு செய்துவிட்டார்களோ!  என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

பொதுவாக சாலை விபத்துகள் எப்போதும்  நடப்புது தான்.  ஆனால் லாரி விபத்துகள்?  அதுவும் டயர்கள் கழன்று வந்து விபத்துகளை ஏற்படுத்துவது  நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.  அது இப்போது சாலைகளில்  சர்வ சாதாரணமாக  நடந்து கொண்டிருக்கிறது!

இன்றைய நிலையில் நாம் பார்க்கும் போது  இது தொடரும் என்றே தோன்றுகிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோன்றவில்லை. இதுவரை எடுக்காதவர்கள் இனி மேலா எடுக்கப் போகிறார்கள்?

கார் பயனீட்டாளர்கள் என்கிற முறையில் நாம் என்ன செய்ய முடியும்? ஒன்று செய்யலாம். லாரிகளின் பின்னால்  லாரியை ஒட்டிக்கொண்டு  போகாதீர்கள் என்பது தான். நம்முடைய பாதுகாப்பு நமக்கு முக்கியம். லாரிகளின் பின்னால் போய் நாம் ஏன் அடிபட வேண்டும்? பாதுகாப்பாகவே இருப்போம்.

No comments:

Post a Comment