Thursday 30 May 2019

சமய நெறிகள் போதிக்கப்பட வேண்டும்

நம் நாட்டில் எந்த ஒரு மதமும் புதிதாக வந்தது அல்ல. எல்லாம் நீண்ட காலமாக இங்கு நடப்பில் உள்ள மதங்கள் தான். 

இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம், பாஹாய், இந்து மதம் - இவைகளெல்லாம் காலங்காலமாக நம்மிடையே உள்ளே மதங்கள் தான். ஒன்றுமே புதிதல்ல. ஒரு வேளை ஒவ்வொரு மதத்தினரும் பிற மதங்களைப் பற்றி அறியாதவர்களாக இருக்கலாம். அது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.  ஆனால் பள்ளிவாசல்கள் நமக்குத் தெரியும். இந்துக் கோவில்கள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவ தேவாலயங்கள் நமக்குத் தெரியும். பௌத்தக் கோவில்கள் நமக்குத்  தெரியும்.  இவைகளெல்லாம் வழிப்பாட்டுத் தலங்கள் என்பதை மாணவப் பருவத்திலிருந்தே நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். காரணம் பள்ளி செல்லுகின்ற போதும் சரி, வருகின்ற போதும் சரி ஏதோ ஒர் இடத்தில் ஏதோ ஒன்று நமது கண்களுக்கு அகப்படாமல் போகாது. வழிப்பாட்டுத் தலங்கள் வணக்கத்துக்கு உரியவை,  புனிதம் கொண்டவை என்கிற ஒரு புரிதல் நமக்கு உண்டு. அதனால் தான் அதற்குரிய மரியாதையை நாம் கொடுத்து வருகிறோம். 

வெறும் வழிப்பாட்டுத் தலங்கள் தான் என்றாலும் அவைகள் மீது நமக்குள்ள மரியாதை குறையவில்லை. கட்டடங்களுக்கே நாம் மரியாதைக் கொடுக்கிறோம் என்றால் அங்கு வழிபடும் பக்தர்கள் மீது நமக்கு என்ன பிரச்சனை?  அவர்களையும் நாம் மதிக்கிறோம்.  அதனால் தான் இந்நாட்டில் மதம் என்பது என்றுமே ஒரு பிரச்சனையாகவோ,  தடையாகவோ இருந்ததில்லை. எந்த ஒரு மதமும் உயர்ந்தது, தாழ்ந்தது என்கிற எண்ணமே நமக்கு வந்ததில்லை 

ஆனால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை அரசியல்வாதிகள் கையில் எடுத்தால் அது அனர்த்தமாகி விடும் என்பதை நாம் பார்க்கிறோம்.  ஒன்றுமே இல்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்கி அதனை தங்களது இலாபத்திற்குப் பயன்படுத்துபவர்கள் தான் அரசியல்வாதிகள். அவர்களுக்கு அது தான் வாக்குச் சீட்டை கொண்டு வரும் துருப்புச் சீட்டு. 

எது எப்படி இருந்தாலும் நமது இளம் தலைமுறையினர் ஒவ்வொரு வரும் தங்களது மதம் மட்டும் அல்ல பிற மதங்களில் உள்ள நெறிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு மதமும் அநியாங்களையும், அக்கிமரங்களையும், அடிதடிகளையும் பின் பற்றச் சொல்லவில்லை.  மதங்கள் நல்ல பாதைகளைக் காட்டுகின்றன.  நல்ல போதனைகளைக் கொடுக்கின்றன. நல்ல நெறிகளுக்கு வழி  காட்டுகின்றன. 

சமய நெறிகள் என்பது அனைவருக்குமே! அனைத்துச் சமய நெறிகளும் அனைவரும் கற்றுத் தெளிய வேண்டும்!

No comments:

Post a Comment