Wednesday 28 September 2022

இதுவா வியாபாரம்?

 

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நண்பர் எப்படி வியாபாரம் செய்தார் என்று அவர் மனைவி சொன்ன போது 'அட! இப்படியுமா?' என்று தான் நினைக்கத் தோன்றியது!

எல்லா வியாபார விதிமுறைகளையுமே  மீறிவிட்டார்! கடைசியில் என்ன ஆனது? எல்லாமே ஆகிவிட்டது! எதுவுமே மிஞ்சவில்லை! அனைத்தையும் இழந்துவிட்டு 'நான் படிக்காதவன்!' என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தானே  தேற்றிக் கொள்கிறார்! மற்றவர்களிடமிருந்து அனுதாபம் தேடுகிறார்!

படிக்காதவர்கள் வியாபாரம் செய்வது என்பது ஒன்றும் புதிதல்ல. உலகம் அனைத்திலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவருக்கு ஆங்கிலம் தான் தெரியவில்லையே தவிர தமிழ் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தாய் மொழி தெரிந்தாலே போதும் உலகையே ஆளலாம்! வியாபாரத்தை ஆள முடியாதா? தமிழ் நாட்டில் ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன.

வியாபாரம் செய்ய நினைப்பவர்களுக்கு இவரின் தோல்விக்கதை நிச்சயமாக ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்பது தான் நமது அச்சம்.  கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத மனிதராக இவர் இருந்திருக்கிறார்! இவர் வியாபாரி என்பதற்கான அடையாளமே இவரிடம் இருந்ததில்லை! அப்புறம் என்ன வியாபாரம் செய்தார்?

உண்மையைச் சொன்னால் இந்த நண்பர் தன்னை ஓரு தோல்வியாளர் என்கிற எண்ணத்தை அவர் எப்படியோ  தனது மனதில் விதைத்து விட்டார்.  அவர் மனைவி சொல்லுகின்றபடி இவர் தனது வியாரத்தை இரண்டு, மூன்று மாதத்திற்கு  ஒருமுறை மாற்றிக் கொண்டு  வந்திருக்கிறார்! ஒரு தொழிலும் அவர் நீடித்து நிற்கவில்லை. இப்படி செய்ததைவிட ஒரு வியாபாரத்தை எடுத்துக் கொண்டு அதிலேயே அவர் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கலாம். இப்படி ஒரே  வியாபாரத்தில் அவர் கவனம் செலுத்தியிருந்தால் அந்த வியாபாரம் அவருக்குக் கைக்கொடுத்திருக்கும். உடனே கோடிகளைப் பார்க்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை. ஆனால் அது அவரை வாழ வைத்திருக்கும்.

நண்பரின் குறைகள் என்ன? அவரிடம் பணம் இருந்தது. வியாபாரத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். பணம் இல்லாத போது தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்தார். அனைத்தையும் இழந்த பின்னர் மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டார். நல்ல வேளை அவரின் உறவுகள் யாரும் அவரிடம் நெருங்கவில்லை. நெருங்கியிருந்தால் அவர்களையும் நொறுங்க வைத்திருப்பார்!

நண்பருக்குத் திறமைகள் உண்டு. ஆனால் அவரது திறமையை ஒரே தொழிலில் காட்டவில்லை. எல்லாத் தொழில்களும் அவருக்குத் தெரிந்த தொழிலாக இருக்க முடியாது. அவருக்கு இருந்த அனுபவத்தில் அவருக்கு ஏற்ற தொழிலில் அவர் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம். கையில் பணம் இருந்ததால்  ஒவ்வொரு வியாபாரமாக மாற்றிக் கொண்டே வந்து கடைசியில் மாட்டிக் கொண்டார். எல்லாவற்றையும் இழந்த பிறகு  "நான் படிக்காதவன்"  என்று ஒரு முத்திரையைக் குத்துகிறார்!

ஒன்று சொல்லுகிறேன்: வியாபாரம் யாரையும் கைவிட்டதில்லை! நாம் தான் வியாபாரத்தைக் கை விடுகிறோம்!

No comments:

Post a Comment