Thursday 8 September 2022

MAIKA, MIED, MITRA



 


மைக்கா, மித்ரா, MIED -இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்  என்று எதிர்பார்க்கப்பட்ட ம.இ.கா.வின் குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களைக் கணக்காய்வு செய்ய வேண்டும்  என்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார். நிதிமுறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதை அறிய இந்த ஆய்வு தேவை என்பதாக அவர் கூறுகிறார்.

PKR இந்திய சமூகத்துடனான ஒரு கலந்துரையாடலில்  அன்வார் இப்ராகிம் இதனை அறிவித்தார். இந்திய சமூகம் எல்லாக் காலங்களிலும் தங்களது குறைபாடுகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த குறைபாடுகளைக் களைய அரசாங்கம் பல கோடிகளைக் கொட்டியிருக்கிறது. இருந்தும் இந்திய சமூகத்தின் பிரச்சனைகள்  களையப்படவில்லை.

மித்ராவில் போடப்பட்ட பணம் என்னவாயிற்று என்று இதுவரை எந்த ஒரு விளக்கமும் இல்லை.  MIED - யிலும் பல கோடிகளை அரசாங்கமும் போட்டிருக்கிறது. அதுவும் கல்வியில் ஒன்றும் பெரிதாகச் சாதித்துவிடவில்லை. நொண்டிக் கொண்டுதான் இருக்கின்றது!

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்  அவர்களின் கேள்விக்கு ம.இ.கா. வின் பதில் என்னவாக இருக்கும்? வீரவசனம் பேசுவதற்கு அவர்கள் என்றென்றும் தயார். அது வீரவசனம் மட்டும் தான். மற்றபடி  அதனால் இந்தியர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அந்த வீரவசனத்தினால் கட்சியில் உள்ள தலைவர்கள் பயன் பெற்றிருக்கிறார்களே தவிர, அவர்களைத் தவிர்த்து, இந்தியர்கள் யாரும்  பயன்படவில்லை!

இந்தியர்களை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்கிற நேர்மை மட்டும் ம.இ.கா.வினருக்கு இருந்திருந்தால் இந்தியர்களின் முன்னேற்றம் எப்பேயோ அமைந்திருக்க வேண்டும். சோகமான செய்தி என்னவென்றால் அம்னோவோடு கைகோர்த்துகொண்டு இந்தியர்களுக்கு எதிராகவே செயல்பட்டனர்.

இந்தியர்களின் முன்னேற்றம் என்றால் என்னவென்று ம.இ.கா. வினர் மிகத்தெளிவாக  தெரிந்து வைத்திருக்கிறார்கள். உடைந்து போன கோயில்களின் ஒரு பகுதியை சீரமைக்க சில ஆயிரங்கள் அல்லது இலட்சங்கள்  போதும். ஏதோ ஒருசில தமிழ்ப்பள்ளிக்கூடங்களைச் சீரமைக்க சில ஆயிரங்கள் அல்லது இலட்சங்கள். இது தான் இந்தியர்களின் தேவை என அவர்கள் நினைக்கிறார்கள். இதைக் கொடுத்தாலே இந்தியர்களைத் திருப்திபடுத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். 

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கல்வி எங்களுக்குத் தேவை. வியாபாரம் எங்களுக்குத் தேவை. தனிமனித முன்னேற்றம் தேவை. இதற்குத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அன்வார் இப்ராகிம் கேட்கிற கேள்வி சரியானது தான். ம.இ.கா. வின் அந்த நிறுவனங்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரிய வேண்டும். கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். உண்மை வெளிவர வேண்டும்.

No comments:

Post a Comment