Wednesday 21 September 2022

எங்களால் முடியவில்லை!

 

மீண்டும் காவல்துறை  தனது திறமையின்மையை ஒப்புக் கொண்டது! "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" தெரிந்தால் பொது மக்கள் எங்களுக்குத் தகவல் கொடுக்கலாம்!"

தனது முன்னாள் மனைவியிடமிருந்து  மூன்று பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போன முகமது ரிதுவான் அப்துல்லா இரண்டு குழந்தைகளைத் தாயிடம் ஒப்படைத்தாலும், தனது கடைசி குழந்தையை, நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், இன்னும்  ஒப்படைக்காமல் இருக்கிறார்.  ஒரு தாயின் சோகம் அதிகாரவர்க்கத்தின் அதிகாரம்.

ஏற்கனவே வந்த செய்திகளின்படி ரிதுவான்  நாட்டைவிட்டு எங்கும் ஓடிப்போகவில்லை. அவர் இந்நாட்டில் தான் இருக்கிறார். இங்கு தான் வேலை செய்கிறார். இங்கு தான் தவணையில் கார் வாங்கியிருக்கிறார்.அந்தக் கடைசி குழந்தையும் இங்கு தான் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் காவல்துறை இன்னும் அவருடைய பழைய முகவரியிலேயே தேடிக் கொண்டிருக்கிறார்கள்!

காவல்துறை சொன்னால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். ஏன் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கேட்டால் நீங்கள் கண்டுப்பிடித்துத் தாருங்கள் என்கிறார்கள்!  'அது எங்கள் வேலை இல்லையே' என்றால் 'அப்போ வாயை மூடிக்கொண்டு சும்மாயிருங்கள்' என்கிறார்கள்!

ஒரு வழக்கு எத்தனை ஆண்டுக்காலம் இப்படி இழுத்துக் கொண்டே போவது? பொது மக்களுக்குத் தான் சலிப்புத் தட்டுகிறது! காவல்துறை எந்த சலனமும் இல்லாமல் தேய்ந்து போன பழைய ரிக்கார்ட் மாதிரி ஒரே பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது!

இது ஒருவகையான அதிகாரத் துஷ்பிரயோகம் என்று தெரிகிறது. தெரிந்து என்ன செய்ய? அதிகாரம் மதவாதிகள் கையிலிருந்தால்  எப்படி எல்லாம் நாடு குட்டிச்சுவராகும் என்பது நமக்குப் புரிகிறது. அதற்குச் சரியான சான்று: ஆப்கானிஸ்தான்! நம் நாடு மதவாதிகளின் கையில் இல்லை ஆனால் அவர்களின் ஊடுருவல் அதிகார மையத்தில் ஆழ்ந்து கிடக்கிறது.

சரி, இவர்கள் எத்தனை ஆண்டுகள் இப்படியே சொல்லிக் கொண்டே இருப்பார்கள்? நமது எண்ணம் எல்லாம் ஆட்சி மாறினால் அடங்கி விடுவார்கள் என்பது தான்! இப்போதைக்குக் காவல்துறை "எங்களால் முடியவில்லை" என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லும் நிலையிலில்லை!

No comments:

Post a Comment