Friday 23 September 2022

இலஞ்ச ஊழலில் சிக்கியிருக்கிறோம்!

 

பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் ஷா அவர்கள் நாட்டில் நிலவும் இலஞ்சம் ஊழல் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார்.

சுல்தான் அவர்களைப்போல அனைத்து மாநில சுல்தான்களும் இது பற்றி பேசி அரசியல்வாதிகளுக்கு விழிப்பை ஏற்படுத்த வேண்டும்.  இந்த செய்தி அரசியல்வாதிகளுக்குப் போய் சேர்ந்தால்  அதன் பின்னர் அரசாங்க அதிகாரிகளுக்கும் போய்ச் சேர்ந்துவிடும்.

இலஞ்சம் இல்லை ஊழல் இல்லை என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. இங்கு எந்த  அரசியல்வாதியும் அரசாங்க அதிகாரியும் புனிதராக இல்லை! இது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

இந்த இலஞ்ச ஊழலால் பாதிப்பு அடைபவர்கள்  பொது மக்கள் தான். இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இலஞ்சம், ஊழல் என்று சொன்னால் வெறும் பணம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. அதற்கு ஈடாக வேறும் ஒன்றும் உண்டு. அதுவும் ஊழல் தான். ஒரு வேலையாக அரசாங்க அலுவலகத்திற்குப் போனால் அந்த வேலை உடனடியாக நடப்பதில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி 'இன்று போய் நாளை வா!' என்று அனுப்பிவிடுவார்கள். அடுத்த நாள் போனாலும் அந்த வேலை முடியாது. ஏதோ ஒன்றைத் தவறு என்று சொல்லி திருத்திக் கொண்டு வாருங்கள் என்பார்கள்!  இப்படியே இழுத்தடித்து பின்னர் நீங்களே ஆன்லைனில் செய்து கொள்ளுங்கள் என்பார்கள்!

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் அரசாங்க அலுவலகங்களில் பணி புரியும் பலருக்கு அவர்களுடையே வேலையைப் பற்றி அரைகுறையாகக் கூட  தெரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்! ஆனால் அதனை அவர்கள் வெளியே காட்டிக் கொள்ளாமல் நம்மையே அந்த வேலையைச் செய்யும் நிலையை ஏற்படுத்துகிறார்கள்!

இலஞ்சம், ஊழல் என்று பேசும் போது அரசாங்க நடுநிலை, கீழ்நிலை ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவர்கள் தான் மக்களோடு அன்றாடம் பழகுபவர்கள். இவர்களும் இலஞ்சம் ஊழலில் ஒரு பகுதியினர் தான்!

நாடு எல்லா வகையிலும் இலஞ்ச ஊழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. பெரும் பெரும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. குத்தகைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக  அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஊழலில் சம்பந்தப்படுகிறார்கள். மேல்மட்டத்தில் எப்படி இலஞ்சம் பேயாட்டம் ஆடுகிறதோ அதே போல கீழ்மட்டத்திலும் அதே நிலை தான்.

பேராக் சுல்தான் இதுபற்றிப் பேசி தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மேல்மட்டத்தில் இன்னும் அதிகமாகப் பேசப்பட வேண்டும்.

இலஞ்சம் ஊழல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல!

No comments:

Post a Comment