ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். சிங்கப்பூருக்குச் செல்லுவது என்பதை வெளிநாடுகளோடு ஒப்பிட வேண்டாம். ஆனால் மற்ற நாடுகள் எதுவாக இருந்தாலும், சிங்கப்பூரைத் தவிர்த்து, அது வேளிநாடு தான்.
வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு இன்று பலர் தயாராக இருக்கின்றனர். இளைஞர்கள் மிக எளிதான முறைகளில், நினைத்தால் வெளிநாடு போய்விட வேண்டும் என்று நினைக்கின்றனர். "எளிதாக" என்று நினைத்தால் அதற்கான விளைவுகளுக்கும் தயாராகிவிட வேண்டும்.
ஆற அமர யோசித்து, ஒரளவு நீங்கள் போகின்ற நாட்டின், அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து, எல்லாவாற்றையும் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்தார்களே அவர்களில் பலர் ஏமாற்றப்பட்ட கதைகளை நாம் அறிந்திருக்கிறோம். அடி உதைகளோடு அவர்கள் திரும்பி தமிழ் நாட்டுக்குச் சென்ற கதைகள் எல்லாம் நமக்குத் தெரியும்.
ஆனால் இங்கிருந்து வெளிநாடு போக வேண்டுமென்றால் இப்போது நிலைமை வேறாக மாறிவிட்டது. இப்போது ஏஜெண்டுகள் யாரும் இல்லை. ஏமாற்றுப் பேர்வழிகள் என்பது பழைய கதை. இப்போது ஈடுபட்டிருப்பது மோசடிக்கும்பல். பலே கில்லாடிகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களிடமிருந்து பணம் பறிப்பார்கள். அதுமட்டும் அல்ல தேவையென்றால் உயிரையும் பறிப்பார்கள். சமீபத்தில் கொலை ஒன்றும் நடந்திருக்கிறது.
மலேசியர்களில் சுமார் 300 பேருக்கு மேல் இந்த கும்பல்களிடம் மாட்டிக் கொண்டு செய்வதறியாது திகைப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதாகச் சமீபத்திய செய்தி ஒன்று கூறுகிறது.
இப்போது இந்த மோசடிக் கும்பல்களின் அராஜகம் வரம்பு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. காவல்துறைக்குச் சவால் விடும் கும்பலாக இவர்கள் மாறியிருக்கின்றனர். எங்கிருந்து இவர்கள் செயல்படுகிறார்கள் என்பதும் கூட அறியமுடியாத விஷயமாக இருக்கிறது!
ஆரம்பத்தில் மக்காவ் ஸ்கேம் என்றார்கள். அவர்கள் பெரும்பாலும் சூதாட்டக்காரர்களைத்தான் குறிவைத்தார்கள். இப்போது கைப்பேசிகளை வைத்துக் கொண்டே எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்துவிட்டார்கள். இளம்பெண்கள், வயதானவர்கள் அனைவருமே இவர்களின் தில்லுமுல்லுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.
இப்போது, ஆகக் கடைசியாக, வேலை தேடும் இளைஞர்களையும் குறிவைத்துக் காய்களை நகர்த்துகிறார்கள்! இளைஞர்களும் அவர்களின் கண்ணியில் மாட்டுகின்றனர்.
வெளிநாடுகளில் வேலை வேண்டுமென்றால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த நாட்டில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் மிகவும் நல்லது. தனி ஆளாக நீங்கள் முயற்சி செய்தால் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுவே நமது ஆலோசனை!
No comments:
Post a Comment