மழைக்காலம் என்பதால் இந்த ஆண்டு தேர்தல் வேண்டாம் என்பதாக எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லிவிட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த ஆண்டு தேர்தல் வைப்பதே நல்லது என்று கூறியிருக்கிறார். ஏன்? நம்ம டாக்டர் மகாதிர் கூட இப்போது மழைக்காலம் அதனால் தேர்தல் அடுத்த ஆண்டு வைப்பதே நல்லது என்றும் ஆலோசனைக் கூறியிருக்கிறார்.
நமது பாஸ் கட்சியினரும் அடுத்த ஆண்டு தேர்தல் வைப்பதே நல்லது என்று பிரதமருக்கு யோசனைக் கூறுகின்றனர். பினாங்கு மாநிலமோ இந்த ஆண்டு தேர்தல் என்றால் சட்டமன்ற தேர்தலை நடத்தமாட்டோம் என்று சொல்லி வருகின்றனர். நெகிரி செம்பிலானும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம். வாய்ப்பு உண்டு.
மலேசியர்களுக்கும் "இப்போதே தேர்தல் நடத்த வேண்டும் என்கிற அவசியம் எதுவுமில்லை! அடுத்த ஆண்டே நடத்தலாம். ஏன் இந்த மழைக்காலத்தில் அவதிப்பட வேண்டும்?" என்கிற கேள்வி உண்டு.
இன்று நாட்டில் பல இடங்களில் திடீர் திடீரென மழை பெய்கிறது. வெள்ளம் ஏறுகிறது. வீடுகளில் வெள்ளம் புகுந்துவிட்டது. கார்கள் தண்ணீரில் மிதக்கின்றன போன்ற செய்திகள் அன்றாடச் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. மழை என்றாலே பயம் வருகிறது. எந்த நேரத்தில் மழை நீர் வீட்டினுள் புகுமோ என்கிற பயம் ஏற்படுகிறது!
இந்த நேரத்தில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் இந்த ஆண்டு தேர்தல் வைக்கலாம் எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறார். அவரின் கருத்துப்படி மழைக்காலம் என்பது இப்போது இல்லை. நவம்பர் மாதத்திற்குப் பின்னர் தான் வரும் என்கிறார்.
வருடா வருடம் அப்படித்தான் வரும். ஆனால் இப்போது நிலைமையே மாறிவிட்டது. இப்போது பல இடங்களில் மழை, வெள்ளம் என்று செய்திகள் வருகின்றன. வெளி மாநிலங்களுக்குப் போக வேண்டுமென்றால் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் தான் போக முடிகிறது.
ஆய்வாளர் சொல்லுவது சரிதான் என்றாலும் இப்போது நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் சொல்லுவதைப் பார்த்தால் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டும். இன்றைய நிலையில் அது முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் நினைத்தால் பூனையை யானையாக்க முடியும், யானையைப் பூனையாக்க முடியும்! அந்த ஆற்றல் அவர்களிடம் உண்டு!
நமக்கோ, மழை வருமா, வராதா என்பதைவிட தேர்தல் எந்த நேரத்தில் வரவேண்டுமோ அந்த நேரத்தில் நடத்தினால் போதும் என்பது தான்! அப்போது மழை வந்தால் வரட்டும்! அதனாலென்ன?
No comments:
Post a Comment