Tuesday 6 September 2022

வங்கியே பொறுப்பேற்க வேண்டும்!

சமீப காலங்களில் வங்கிகளை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துக் கொண்டே போகிறது. அது வங்கிகளின் பணம் அல்ல மக்களின் பணம். அதற்கு ஒரு முடிவே இல்லையா என்கிற அளவில் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகிறது.

இது எங்கள் குற்றம் அல்ல என்று வங்கிகள் கை விரிக்கின்றன. அப்படியென்றால் யார் குற்றல் என்கிறார்கள் மக்கள். மோசடிக் கும்பல்களைப் பிடிப்பது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை. பணம் இழப்பதைத் தடுப்பதுவும் எளிதாகத் தெரியவில்லை.

எளிதாகத் தெரிவது எது? அதைப்பற்றி எழுதுவது! அதைப்பற்றி காவல்துறைக்குப் புகார் செய்வது! கோடிக் கணக்கில் பணம் வங்கியிலிருந்து கபளீகரம் செய்யப்படுகிறது. ஆனால் அதனைத் தடுப்பது எப்படி என்று  வழி தெரியாமல் வங்கிகளுக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது!

மிகச் சாதாரணக் குடும்பங்களில் உள்ளவர்களின் சேமிப்புகள் பறிபோகின்றன. கொஞ்சநஞ்சம்  இருக்கிற பணமும் போகிற இடம் தெரியவில்லை. இலட்சக்கணக்கான சேமிப்புகளை அப்படியே துடைத்து எடுத்து விடுகின்றனர் கொலையாளிகள்!

இப்போது நாம் என்ன தான் சொல்ல வருகிறோம்? மோசடிக் கும்பல்கள் செய்கின்ற இந்த அநியாங்களை இப்படியே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பணக்காரர்கள் வீட்டுப் பணம் மட்டும் அல்ல  ஏழைகளின் வீட்டுப் பணமும் தொடர்ந்து பறிபோகிறது.

மக்களுக்கு நாம் சொல்லுவதெல்லாம்  நமது தொலைபேசிகளுக்கு அழைப்புகள் வரும். அதுவும் அவர்கள் வயதானவர்களைத்தான் குறிவைத்துப் பேசுகிறார்கள். வயதானவர்கள் தான் எளிதில் அகப்பட்டு விடுகிறார்கள். யார் பேசினாலும் நம்பி விடுகிறார்கள்.

"உங்களுடைய வங்கி எண்ணைக் கொடுங்கள்" என்கிற அழைப்பு வந்தாலே எச்சரிக்கையாகி விடுங்கள். வங்கிகள் தனது வாடிக்கையாளர்களைக் கூப்பிட்டு எண்களைக் கொடுங்கள் என்று கேட்பதில்லை. ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும். காவல்துறையும், வங்கிகளும் யாரையும்  தொலைபேசியில் அழைத்துப் பேசுவதில்லை. வங்கிகள் அழைத்தாலும் வங்கி எண்களைக் கேட்பதில்லை.

இங்கு நமது குற்றச்சாட்டு என்பதெல்லாம் வங்கிகள் மீது தான். அவர்கள் எளிதாக "எங்களுக்குத் தெரியாது!" என்று சொல்லிவிட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்கள் தான் இந்தக் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.

பாதுகாப்பிற்காக பணத்தை வங்கியில் போடுகிறோம். அந்த பாதுகாப்பே பாதுகாப்பில்லை என்றால் வேறு எந்த பாதுகாப்பை தேடிப் போவது?

No comments:

Post a Comment