Tuesday 27 September 2022

தமிழ்ப்பள்ளியின் உரிமம் ரத்து

 

      நன்றி: வணக்கம் மலேசியா           தமிழ்ப்பள்ளியின் உரிமம் ரத்து

கல்வி அமைச்சின் அராஜகமாகத்தான் நாம் இதனைப் பார்க்கிறோம். பாரிசான் அரசாங்கத்தில், அவர்களோடு சேர்ந்து கொண்டு ம.இ.கா.வும், தங்களது ஆணவத்தைக் காட்டுகின்ற ஒரு செயலாகவே இது தெரிகிறது.

கோலகெட்டில் Badenoch தோட்டத் தமிழ்ப்பள்ளியின் உரிமம் கல்வி அமைச்சினால் ரத்து செய்யப்பட்டதை அறியும் போது கல்வி அமைச்சின் அதிகாரத் துஷ்பிரயோகமாகத்தான் நம்மால் இதனைப் பார்க்க முடிகிறது.

பள்ளியில் படிக்க மாணவர்கள் இல்லை. அதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்தத் தோட்ட தமிழ்ப்பள்ளியின் உரிமத்தைப் பயன்படுத்தி  பாகான் டாலாமில் ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் நிலத்தில் பெட்னோக் தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்க மேலாளர் வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான தொடக்க வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மேலாளர் வாரியம் ரத்து செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு கடிதம் அனுப்பியிருக்கிறது.

ஏற்கனவே மேலாளர் வாரியத்திற்கு அனுமதி கொடுத்த கல்வி அமைச்சு இப்போது அதனை ரத்து செய்திருப்பதற்கான காரணம் தெரியவில்லை. அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்றால்  பெட்னோக் தமிழ்ப்பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு பள்ளி நிரந்தரமாக மூடப்படுகிறது என்பது தான் அதன் பொருள்.

இதற்கிடையே  பள்ளி மூடப்படுவதை எதிர்த்து, கல்வி அமைச்சின் முடிவுக்கு எதிராக,  வழக்குத் தொடுக்கப்படும் என்பதாகக் கூறுகிறார் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஷ் முனியாண்டி. 

அதனை நாம் வரவேற்கிறோம். அதோடு மட்டும் அல்ல. நமது சமுதாயமும் அதற்கான ஆதரவை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள் பல இருக்கின்றன.  குறிப்பாக முப்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் அதிகமாகவே இருக்கின்றன. இதற்கான காரணங்களை நாம் அறிந்தது தான்.  தோட்டப்புறங்களிலிருந்து மக்கள் வெளியேறிய பின்னர் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயின.

இப்போது ஒரு பள்ளியை மூடினால் பின்னர் கல்வி அமைச்சு அதையே சாக்காக வைத்துக் கொண்டு குறைவான எண்ணிக்கை கொண்ட மற்ற பள்ளிகளையும் மூடுகின்ற ஒரு நிலை ஏற்படும்.

இந்தப் பள்ளியின் உரிமம் ரத்துச் செய்யப்படுமானால்  நாட்டில் உள்ள மற்ற பள்ளிகளுக்கும் இதுவே ஒரு முன்னுதாரணமாகி விடும்.  இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

நமது எதிர்ப்பினைத் தெரிவிப்பது நமது கடமை!

No comments:

Post a Comment