ம.இ.கா. வை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ம.இ.கா.வினர் கூறி வருகின்றனர்.
ஆனால் அவர்களின் செயல்பாடுகள் எந்த வகையிலும் இந்திய மக்களுக்குப் பயன் தரும் வகையில் இல்லை என்பது தான் இன்றைய நிலை.
சமீபத்திய மெட் ரிகுலேஷன் நுழைவு பற்றி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வாய் மூடி மௌனியாகத்தான் இருந்தார்கள்! இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்கிற கூச்சநாச்சம் எதுவுமில்லாமல் நமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்!
இவர்கள் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியர்கள் கண்டிப்பாக அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமாம்! இல்லாமல் போனால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுமாம்! இப்போது மட்டும் என்ன அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே!
ஏம்ஸ்ட் கல்லூரியில் மருத்துவம் பயிலுகின்ற ஒரு மாணவன். தன்னுடைய கல்வி கட்டணத்தைக் கட்ட இயலாத நிலை. கட்ட வேண்டியது 80,000 வெள்ளி. அவனால் கட்ட முடியவில்லை. அந்த மாணவனின் பெற்றோர்களால் கட்ட முடியாததால் பல இடங்களில் மோதி பார்க்கின்றனர். அதில் ம.இ.கா.வும் அடங்கும். ஆனால் அவர்களுக்கு உதவ யாரும் தயாராக இல்லை. கடைசியாக எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான பினாங்கு துணை முதல்வர், பேராசிரியர் இராமசாமி அவர்கள் அந்த மாணவனுக்கு உதவுயிருக்கின்றார்! இந்திய மாணவராயிற்றே என்கிற கரிசனம் அவருக்கு இருந்தது.
உதவுவார்கள் என்று நம்பியது ம.இ.கா.வை. ஆனால் எதிர்க்கட்சி தான் அவர்களுக்கு உதவியது என அறியும் போது நமக்கு ம.இ.கா. மீது கோபம் தான். இந்தியர்களை வைத்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பல் யார் என்பது இந்திய சமுதாயம் அறியும். மைக்கா வாக இருக்கட்டும், மித்ரா வாக இருக்கட்டும் கொள்ளைக் கும்பல் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு வேண்டியது பதவி, பட்டம் மட்டும் தான். உதவி என்று வரும் போது உதைப்பது தான் அவர்களின் வேலை! அப்படித்தான் தெரிகிறது! என்ன செய்ய?
இந்தக் கும்பலை நம்பி நாம் எப்படி வாக்களித்து இவர்களைக் காப்பாற்றுவது? அது தேவையா? அவர்கள் இந்தியர்களை நம்பவில்லை. அதனால் மலாய்க்காரர் பக்கம் சாய்கின்றனர். அது தான் அவர்களுக்கு நல்லது. நாம் இவர்களுக்கு வாக்களித்து நமது பொன்னான வாக்குகளை ஏன் விரயம் செய்ய வேண்டும்?
இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா என்பது யோசிக்க வேண்டிய விடயம்!
No comments:
Post a Comment