Friday 30 September 2022

நானும் அப்படித்தான் நம்பினேன்!

 


முன்னாள் துணைப்பிரதமரும், இந்நாள் அம்னோ தலைவருமான அமாட் ஸாஹிட் ஹாமிடி,  மேல் சுமத்தப்பட்ட  நாற்பது குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அவர் விடுதலை பற்றி பல்வேறு கருத்துகள் கூறப்பட்டாலும், அதை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, ஸாஹிட் என்ன சொல்லுகிறார் என்பதைப்  பார்ப்போம்: "வழக்கின் முதல் நாளிலிருந்தே நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது" என்கிற அவரது வார்த்தை நமக்கும்  அவரைப் போலவே நமது நீதித்துறையின் மீது நம்பிக்கை எப்போதும் இருக்கிறது.

ஆனாலும் சொல்லுவது ஓர் அரசியல்வாதி என்பதால் ரொம்பவும் நம்பிக்கை ஏற்பட்டுவிடக் கூடாது. அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் நீதித்துறையைப்பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. தான் குற்றவாளி  அல்ல என்பதாக அவர் பள்ளிவாசலில் கூட பேசியிருக்கிறார். 

பொதுவாக அரசியல்வாதிகள் தாங்கள் புனிதமானவர்கள் என்பதை நிருபிக்க கோயில்களைத் தேர்ந்தெடுப்பார்கள். கோயில்களில் புனித நூல்களின் மேல் அல்லது  கடவுள் மேல் சத்தியம் செய்து தங்களது நேர்மையைக் காட்ட முயற்சி செய்வார்கள். சீனர்கள் சேவலை காவு கொடுத்து சத்தியம் செய்வார்கள். இப்படி பல நம்பிக்கைகள். அதே போல் தான் நஜிப் ரசாக்கும் செய்திருக்கிறார். ஆனால் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்துவிட்டது! அதன் பின்னர் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் மேல் புழுதிவாரி தூற்றினார்கள்!

அப்படியென்றால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் நீதிமன்றம் நியாயம் தவறிவிட்டது என்று கதறுகிறார்கள்!  விடுதலை  பெற்றால்  'ஆகா! நீதி நிலைநிறுத்தப்பட்டது!' என்று  மகிழ்கிறார்கள்!  அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் என்றால் ஏதோ தாங்கள் கூடும்  கட்சிக்கூட்டம் என்று நினைக்கிறார்களோ!

ஆனால் ஒர் உண்மையை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.  டாக்டர் மகாதிர் தனது  காலத்திலேயே நீதிமன்றங்களை, நீதிபதிகளை அரசியல்வாதிகளின்  அடிமைகளாக மாற்றிவிட்டார்! தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எதனையும் மாற்றுவார்.  எதனையும் தனது சார்பாக வைத்துக் கொள்வது அவரது இயல்பு. நீதிமன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல! இப்போது ஸாகிட்டின்  வழக்கும் அதன் நீட்சி தான்!

ஆனாலும்  நாம் நீதிமன்றங்களை நம்புவோம். நமக்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் நீதிமன்றங்கள் தான்! எவ்வளவு தான் நீதிமன்றங்களைக் குறை கூறினாலும் அதைவிட்டால் வேறு போக்கிடம் நமக்கு இல்லை! நியாயங்களை மட்டுமே நம்பும் நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களே இன்னும் நீதியை நிலை நாட்டுகின்றார்கள். அவர்களாலேயே நீதி இன்னும் வாழ்கிறது!

No comments:

Post a Comment